ஒலிம்பியாட் செஸ் விளையாட்டின் சிறப்புதான் என்ன?
சென்னை ஏன் ‘மெக்கா ஆஃப் செஸ்’ (Mecca of Chess) என்று அழைக்கப்படுகிறது? தமிழ்நாட்டின் அசாத்தியமான சதுரங்க கலாச்சாரத்தை தோற்றுவித்தது யார்? இந்த கட்டுரையில் காணலாம்.
44வது உலக செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறும் என்று சில மாதங்களுக்கு முன் வந்த அறிவிப்பு, ‘மெக்கா ஆஃப் செஸ்’ என்ற வாசகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. முன்னதாக, மாஸ்கோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட், உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக சென்னையில் போட்டிகளை நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்த தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் திட்டமிட்டது. இதற்கிடையில், போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. 2013 உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு மிகப்பெரிய செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்துவது இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு ஆகும்.
ஆகவே, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இதில், இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், உலக செஸ் ஒலிம்பியாட் தொடர் என்பது நாடுகளுக்கு இடையிலான குழு விளையாட்டாகும். முன்னதாக, 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
சரி, சென்னை ஏன் கிராண்ட்மாஸ்டர்களின் கூடமாக திகழ்கிறது தெரியுமா? 1961-ம் ஆண்டு நாட்டின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டில் வளர்ந்த மானுவல் ஆரோன் வென்றார், 1988-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து சுப்பராமன் விஜயலட்சுமி 2001-ல் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார் மற்றும் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2018-ல் தனது 12 வயதில் உலகின் இரண்டாவது இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
சமீபத்திய ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ், ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில், 16 வயதான பிரக்ஞானந்தா எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தார். முன்னதாக, மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 1988-ம் ஆண்டு ஒரு கிராண்ட்மாஸ்டர் என இருந்த நிலை, சமீப ஆண்டுகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அதிகளவில் அடைவதைக் காண முடிகிறது.

பிரக்ஞானந்தா
பாபி ஃபிஷ்ஷர்:
14 வயதில் US செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளைய வீரர் என்ற சாதனை படைத்த செஸ் மாஸ்டர் பாபி ஃபிஷ்ஷர், உண்மையில் செஸ் உலகின் ஒரு பெரிய ஜாம்பவான். வரலாற்றின் படி, 1948 முதலே செஸ் பட்டம் சோவியத் வீரர்களின் வசம் இருந்தது. போர் நடந்தபோது, பாபி ஃபிஷ்ஷர் 1972-ல் சோவியத் யூனியனுக்கு அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்து உலக சாம்பியனானார். ஃபிஷ்ஷரின் வெற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில் சென்றடைந்தது. அவரது வெற்றி, செஸ் விளையாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னதாக, 1962-ல் பாபி ஃபிஷ்ஷருக்கு எதிராக விளையாடிய ஒரே இந்தியர் என்ற பெருமையை மானுவல் ஆரோன் பெற்றார்.
1972-ல் தமிழ்நாட்டின் மானுவல் ஆரோன் சோவியத் கலாச்சார மையத்தில் செஸ் கிளப்பைத் தொடங்கியபோது, ஆரோன் மூலம் இவ்விளையாட்டை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும் என்று சோவியத் யூனியன் விரும்பியது. அப்போது, சதுரங்கம் தொடர்பான அனைத்தும் யு.எஸ்.எஸ்.ஆரிலிருந்து சென்னைக்கு இலவசமாக இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், செஸ்ஸுக்கென ஒரு கிளப்பும் கட்டினார்கள். முரண்பாடாக, போரிஸ் ஸ்பாஸ்கிக்கு எதிராக பாபி ஃபிஷ்ஷரின் வெற்றியின் காரணமாக சென்னையில் செஸ் புகழ் உச்சிக்கு சென்றது. அதற்கு முன் சென்னையில் கிளப்கள் இல்லை.
ஆரோன் சொன்னதுபோல், 1947-ல் நிறுவப்பட்ட தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் (TNCA), சிறிய மாவட்டங்களில் பரவி, பல வீரர்களை வெளியே கொண்டு வந்தது. மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் எந்த நேரத்திலும் போட்டிகள் நடந்தன. இதற்கிடையில், குழந்தைகளின் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும் என்பதால், அரசு பள்ளிகளில் சதுரங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசும் உத்தரவிட்டது. 2018-ம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் லட்சக்கணக்கான பதிவு செய்யப்படாத வீரர்கள் இருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட சதுரங்கப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இன்னும் பல செஸ் கூடங்கள் வளர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணங்களால், இந்தியாவின் செஸ் தலைநகராக சென்னை அதன் மகுடத்தைத் தக்கவைத்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.