தடுப்பூசி செலுத்திய பின்னரும் சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது ஏன்?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதன் காரணம் என்ன?

  • Share this:
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 2ம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், தற்போது 3வது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையின் (SGPGIMS) இயக்குனரான மருத்துவர் திமன் மற்றும் அவருடைய மனைவி இருவருமே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதிலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கான நோயின் தீவிரத்தன்மையையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் எனவும், அறிகுறிகள் மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவர் திமன் மட்டுமல்லாது கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலையின் தலைவர் பிபின் பூரி, அப்பல்கலையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஹிமன்ஷு ஆகியோரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நோயின் தீவிரத்தை தடுப்பூசி குறைப்பதாக கூறியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சில அமெரிக்கர்களும் நோய்த்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இது அரியதொரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் இவை கவலைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதன் காரணம் என்ன?

வீரியமிக்க தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டாலும் கூட அரிதாக சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

பல கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள், எந்த விதமான தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை பார்க்க முடியும், இது ஒன்றும் ஆச்சரியமான ஒன்றல்ல என்று அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானியும், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவன இயக்குனருமான அந்தோனி ஃபவுசி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 வாரங்களுக்கு பின்னர் 90% அளவுக்கு நோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது டோஸ் எடுத்துக் கொண்ட 2 வாரங்களுக்கு பின்னர் தான் ஒருவர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கருதமுடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாவது ஏன்?

மீண்டும் தொற்று பாதிப்புக்கு ஆளாவது அல்லது அரிதாக பாதிக்கப்படுவது (தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் நோய்த்தொற்றுக்கு ஆளாவது) போன்றவை பல்வேறு காரணங்களால் நடக்கலாம். தடுப்பூசி போடும்போது ஏற்படும் தவறுகள் இதில் முக்கியமானதாகும். தடுப்பூசியை தேவையான வெப்பநிலையை பராமரிக்காதது, கையின் தவறான இடத்தில் ஊசியை செலுத்துவது போன்றவற்றால் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் 2வது டோஸ் எடுத்துக்கொள்ளும் முன்பாகவே நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழலில் இருப்பது போன்றவற்றாலும் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கின்றனர்.

ஒரு நபரின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு மற்றொரு காரணமாக இருக்கக்கூடும். வயோதிகமும் நோய் எதிர்ப்பை குறைக்க காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தடுப்பூசிக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஒரு பக்கம் பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் போது மறுபக்கம் தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்? தடுப்பூசி செலுத்திய நபரால் வைரஸை பரப்ப முடியுமா? தடுப்பூசிகள் இனி செயல்படாத நிலைக்கு வரும் போது வைரஸ் மாற்றமடையுமா? என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.

மிச்சிகன் மருத்துவ பல்கலையில், நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி துறை பேராசிரியர் பெத் மூர், அனைத்து வைரஸ்களும் மாற்றமடையும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வைரஸின் மாற்றமடையும் பண்பின் அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் இல்லை என்பதால் தடுப்பூசிகள் திறன்மிக்கதாகவே இருக்கும் என்பது நமக்கு நல்ல செய்தியே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் தடுப்பூசிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதற்காக கொரோனாவின் புதிய வகைகளையும் அறிஞர்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த மார்ச் 31ம் தேதி National AEFI கமிட்டியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, தடுப்பூசி டோஸ்களை எடுத்துக்கொண்ட 180 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இவர்களில் நான்கில் மூன்று பங்கினர் 3 நாட்களுக்குள் மரணத்தை தழுவியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு தொற்று பாதிப்பு:

பிரபல அறுவை சிகிச்சை மருத்துவர் இந்தர் தியோ ரஞ்சன், மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவர், வாரனாசி மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி, கரீம்கன்ஞ் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருணபா சவுத்ரி ஆகியோர் கொரோனாவுக்கான 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு சில நாட்களுக்கு பின்னர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவருக்குமே மிகவும் சிறிய அளவிலேயே அறிகுறிகள் இருந்துள்ளன.

இந்திய மருத்துவ அசோசியேஷனின் முன்னாள் தலைவர் பி.கே.குப்தாவின் கூற்றுப்படி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்படலாம், ஆனால் நோயின் தீவிரத்தன்மை குறைந்த அளவே இருக்கும்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரந்தீப் குலேரியா சிஎன்என் - நியூஸ் 18க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதையே பிரதிபலித்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் ஆனால் அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலோ அல்லது சிறிய அளவிலோ மட்டுமே இருக்கும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 9 முதல் 12 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என அவர் தெரிவித்தார்.

சென்னையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிவதில்லை: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

மத்திய அரசின் கொரோனா எதிர்ப்பு குழுவின் மைய உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் கூறுகையில், “நம்மிடையே பல தடுப்பூசிகள் இருக்கலாம், ஆனால் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க நீண்ட நாட்களுக்கு முகக் கவசங்கள் அணிவதை கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டும், தற்போது பல மாவட்டங்களிலும் நோய்த்தொற்று மிகத் தீவிரமாக இருப்பதாகவும், ஒட்டுமொத்த அளவில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

 
Published by:Arun
First published: