டெல்லியில் நேற்று பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மோடி நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார்.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அதிமுக-வுக்கு இடம் அளிக்கப்படும் என்றும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால், அதிமுக-வுக்கு அமைச்சரவையில்வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
பீகாரில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சி, அமைச்சரவையில் இடம்பெற மறுத்துவிட்டது. ஒரே ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்க பாஜக முன்வந்ததாகவும், இதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Here are some more pictures from the swearing-in ceremony. Grateful for everyone’s blessings.
The occasion was made even more special by the participation of esteemed world leaders. I thank them for being a part of today’s programme. pic.twitter.com/5EA5SBiizp
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், ”அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே சேர்க்க அவர்கள் விரும்பினர். இது அடையாளமாகவே இருக்கும். எனவே, இது எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் கூறிவிட்டோம்.
இது பெரிய விஷயமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் முழுமையாக உள்ளோம். நாங்கள் அதிருப்தி அடையவில்லை. நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். எந்த குழப்பமும் இல்லை” என்றார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மோடி உள்ளிட்ட 58 பேரில், பாஜக-வைச் சேர்ந்தவர்கள் 54 பேர். இதனைத் தொடர்ந்து, சிரோன்மணி அகாலிதளம், லோக் ஜனசக்தி, சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சியின் அத்வாலே பிரிவு ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மாநில அளவில் பார்க்கும்போது, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிராவில் 8 பேரும், பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்திலிருந்து தலா 5 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகாவிலிருந்து 4 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து தலா 3 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களிலிருந்து தலா 2 பேரும் தேர்வாகியுள்ளனர்.
மேலும், அருணாச்சலப்பிரதேசம், அசாம், சத்தீஷ்கர், டெல்லி, கோவா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், தெலங்கானா, உத்தரகாண்டு மாநிலங்களிலிருந்து தலா ஒருவர் அமைச்சர்களாகியுள்ளனர்.
ஆனால், தமிழகம், ஆந்திரா மாநிலங்களிலிருந்து அமைச்சரவையில் ஒருவர் கூட இடம்பெறவில்லை. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட நிர்மலா சீதாராமன், கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
இதேபோல, தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை.
கேரளத்தைச் சேர்ந்த முரளிதரன், மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார். அமைச்சரவையில் 81 பேர் வரை இடம்பெற முடியும் என்பதால், அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டில் முதல் முறையாக மோடி பதவியேற்றபோது, 46 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பின்னர் அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு 70-ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கட்சி வாரியாக அமைச்சர்கள்:
பாஜக - 54
சிரோன்மணி அகாலிதளம் - 1
லோக் ஜனசக்தி- 1
சிவசேனா- 1
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) - 1
மாநில வாரியாக அமைச்சர்கள்:
உத்தரப்பிரதேசம் - 9
மகாராஷ்டிரா - 8
பீகார் - 5
மத்தியப்பிரதேசம் - 5
கர்நாடகா- 4
குஜராத்- 3
ஹரியானா- 3
ராஜஸ்தான்- 3
ஜார்க்கண்ட்- 2
ஒடிசா- 2
பஞ்சாப்- 2
மேற்குவங்கம்- 2
அருணாச்சலப்பிரதேசம் - 1
அசாம்- 1
சத்தீஷ்கர்- 1
டெல்லி- 1
கோவா- 1
இமாச்சலபிரதேசம் - 1
ஜம்மு-காஷ்மீர்- 1
தெலங்கானா- 1
உத்தரகாண்டு- 1
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.