நாளை சபாநாயகருக்கான தேர்தல்: யாருக்கு வாய்ப்பு?

மோடி

பாஜகவின் கூட்டணிக் கட்சியாக உள்ள சிவசேனா 18 எம்பிகளை பெற்றுள்ளதால் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடாளுமன்ற மக்களவையின் அடுத்த சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 350-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதால், பாஜக தலைமை முடிவு செய்யும் நபர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். யாருக்கு வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

17-வது மக்களவையின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அடுத்த சபாநாயகர் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் மேனகா காந்திக்கு சபாநாயகராகும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜகவின் பல்வேறு மூத்தலைவர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுன்றன.

ஜூயல் ஓரம் முன்னாள் மத்திய பழங்குடியின அமைச்சராக பதவி வகித்தவர். 58 வயதான ஜூயல் ஓரம் பாஜகவில் உள்ள பழங்குடியின தலைவர்களில் மிக முக்கியமானவர். பாஜகவின் வளர்ச்சிக்கு பழங்குடியின மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதை உணர்ந்த வாஜ்பேய் தனது ஆட்சிக் காலத்தில் பழங்குடியினர் நலனுக்காக தனித்துறையை ஏற்படுத்தினார். எனவே பழங்குடியின தலைவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஜூயல் ஓரம் சபாநாயகராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் மற்றொரு தலைவர் ராதா மோகன்சிங். முன்னாள் வேளாண்துறை அமைச்சரான இவர், இந்த முறை பீகாரின் கிழக்கு சாம்ப்ரான் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே ராதா மோகன் சிங்கிற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் முன்னாள் மத்திய இணையமைச்சரான பி.பி.சவுத்ரியின் பெயரும் முன்வைக்கப்படுகிறது. முந்தைய அரசில் சட்டத்துறை இணையமைச்சராக இருந்த சவுத்ரி தற்போது ராஜஸ்தான் மாநிலம் பாலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவில் திறன்மிக்க மூத்ததலைவர்களில் இவரும் ஒருவர் என்பதால் சபாநாயகராக தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியாவிற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

துணை சபாநாயர் பதவியை பொறுத்தவரை கடந்த முறை போல் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த முறை அதிமுகவிற்கு துணை சபாநாயகர் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்துள்ளதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியிடம் நல்ல செல்வாக்கு பெற்றுள்ள பிஜூ ஜனதாதளம், 22 எம்பிகளை கொண்டு 4-வது பெரிய கட்சியாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம், பாஜகவின் கூட்டணிக் கட்சியாக உள்ள சிவசேனா 18 எம்பிகளை பெற்றுள்ளதால் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Also see... சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்:மாணவர்கள் கைது

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: