White Fungus: கரும்பூஞ்சையை விட அதிக ஆபத்தான வெள்ளை பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு: அறிகுறிகளை கண்டறிவது எப்படி?

வெள்ளை பூஞ்சை நோய்

நுரையீரலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை, கல்லீரல், தோல், நகம், மூளை, பிறப்பு உறுப்புகள், வயிறு மற்றும் வாயில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  • Share this:
கடந்த ஆண்டு முதல் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் நமக்கு முதல் அலையே பரவாயில்லை என நினைக்கத்தோன்றும் அளவுக்கு அமைந்தது இரண்டாம் அலையின் பாதிப்பு. கொரோனா முதல் அலையினால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன என்றால் இரண்டாம் அலையினால் மயானங்கள் நிரம்பி வழிகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடையே Black Fungus எனப்படும் கரும்பூஞ்சை என்ற நோய் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டது. பொதுவாக கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர்.

இவ்வகை கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.

தமிழகத்தில் இந்த நோய்க்கு ஒருவர் பலியாகி உள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஒருவர் கரும்பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகி நேற்று பலியானார். மேலும் மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனிடையே கரும்பூஞ்சை நோயை தொற்று நோய் என அறிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்தியுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக கரும்பூஞ்சை நோய் மாறியிருக்கும் நிலையில் தற்போது அதனைவிட பல மடங்கு ஆபத்தான வெள்ளை பூஞ்சை என்ற நோய் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடையே ஏற்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்பு சிலரிடையே கண்டறியப்பட்டுள்ளது. பிரபலமான மருத்துவர் ஒருவர் வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரே இந்த நோய்க்கு ஆளாகிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளை பூஞ்சை நோயின் அறிகுறிகள்?

கொரோனா போன்ற அறிகுறிகள் தென்பட்டும் கொரோனா நெகட்டிவ் என வரும் நோயாளிகளுக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலமாகவே இந்நோயை கண்டறிய முடியும்.

நுரையீரலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் வெள்ளை பூஞ்சை, கல்லீரல், தோல், நகம், மூளை, பிறப்பு உறுப்புகள், வயிறு மற்றும் வாயில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read More:   மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி என தகவல்!

நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்போரும், கொரோனா நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும், புற்றுநோய் பாதித்தவர்கள், அதிகப்படியான ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்பவர்களை இந்நோய் அதிகம் தாக்கும் ஆபத்து இருப்பதனால் மேற்கண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Published by:Arun
First published: