Home /News /national /

நீட் தேர்வை சமஸ்கிருதத்தில் நடத்த சிபிஎஸ்இ தயாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வை சமஸ்கிருதத்தில் நடத்த சிபிஎஸ்இ தயாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நீட் வினாத்தாளில் ஆங்கிலத்திற்கு பதில் சமஸ்கிருதத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    நீட் வினாத்தாளில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் பிழை இருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங் கூறியதாவது: பிராந்திய மொழியில் நீட் தேர்வு எழுதினாலும், தேர்வுக்கான விண்ணப்பத்தில், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத ஒப்புக்கொண்டுதான் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். தமிழில் கேட்கப்பட்ட வினாக்களில் சிறு தவறுகள் இருந்தாலும், ஆங்கில வினாக்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாதா?

    அடுத்தாண்டு முதல், ஆங்கிலத்திலிருந்து பிராந்திய மொழிகளில் மாற்றம் செய்யப்படும் வினாத்தாள், மறுபடி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆங்கில வினாத்தாளுடன் ஒப்பிட்டு பிழைகளை நீக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நுழைவுத்தேர்வை எதிர்க்கும் மனநிலை தமிழகத்தில் உள்ளது. நீட் தேர்வும் அதற்கு விதிவிலக்கல்ல என்றார் மணீந்தர் சிங்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது: தமிழக அரசின் பல்வேறு வழக்குகளில் நான் வழக்கறிஞராக வாதாடியுள்ளேன். மாணவர் சேர்க்கையில் சிறந்த கொள்கைகளை அந்த மாநில அரசு பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் என்றார் அவர்.

    அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி பாப்டே, `ஆங்கிலத்தை மாற்று மொழியாக அம்பேத்கர் பரிந்துரைத்தார். ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு நெருக்கமாக சமஸ்கிருதம் உள்ளது. எனவே, சமஸ்கிருதத்தில் நீட் தேர்வை நடத்த சிபிஎஸ்இ தயாரா?’ என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வினாத்தாள் குளறுபடி தொடர்பான பிரமாணப் பத்திரத்தை சிபிஎஸ்இ அன்றைய தினம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Neet Exam, Neet in english, Sanskrit, Supreme court

    அடுத்த செய்தி