நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் கொரோனாவிற்கெதிரான தடுப்பூசி போடும் பணிகளும் சாதனை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்ஸின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் சந்தையில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் 3 கட்டங்களாக நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் அடுத்த கட்டத்தை எட்டுகிறது, ஆம் நாளை (மே 1) முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
முன்னதாக முன்கள பணியாளர்களுக்கும், அடுத்ததாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என ஒவ்வொரு கட்டமாக இப்பணி நடைபெற்று வந்தது. நம்மில் பலரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் ஆவது போட்டவராக இருக்கலாம் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் முதல் டோஸ் போட்டிருக்கலாம். இரண்டு டோஸ் தடுப்பூசிக்கும் இடையே கால இடைவெளி அவசியமாகிறது.
கோவேக்ஸின் ஆக இருந்தால் 4 வார காலம் எனவும், கோவிஷீல்ட் என்றால் 6 முதல் 8 வாரங்களாகவும் இந்த கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எப்போது எடுத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது.
அப்படி இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு இடைப்பட்ட காலத்தில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் கொரோனாவில் இருந்து குணமாகி அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் 2 முதல் 4 வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.
இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் கோவேக்ஸின் ஆக இருந்தாலும் சரி, கோவிஷீல்ட் என்றாலும் சரி இரண்டு தடுப்பூசிகளுமே கொரோனா வராமல் தடுக்காது. ஆனால் தீவிர நோய்த்தொற்றில் இருந்து இரண்டுமே நம்மை காப்பாற்றும். அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட அது தீவிர தொற்றிலிருந்தும், அறிகுறிகள் வராமலும் நம்மை காக்கும்.
சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு மாதம் முதல் 3 மாத காலத்திற்கு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதே போல அறிகுறிகள் இல்லாமல் பாதிப்புக்கு ஆளானவர்கள் சில நேரத்தில் தங்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை அறியாமலே தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரிடலாம், அப்படி இருந்தாலும் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அது கவலைக்குரிய செயலும் கிடையாது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி 6 முதல் 9 வாரங்கள் மட்டுமே நீடிக்கும், இதுவே தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் இந்த கால வரம்பு மேலும் அதிகரிக்கும். தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு தடுப்பூசிகளுமே புதியவை என்பதால் தற்போதைய நிலையில் இவற்றை பற்றிய புரிதலும் குறைவாக இருக்கின்றன. வரும் நாட்களில் கிடைக்கும் கூடுதல் தரவுகளை வைத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எந்த அளவுக்கு இவை அதிகரிக்கச் செய்கின்றன என்ற தெள்ளத்தெளிவான தகவல்கள் நமக்கு கிடைக்கும். உருமாறிய கொரோனா தொற்று நம்மை பாதித்தாலும் தீவிர தொற்று பாதிப்பில் இருந்து தடுப்பூசி நம்மை காக்கும்.
டாக்டர் பாண்டா டெல்லியில் உள்ள ஐசிஎம்ஆர்-ல் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவராக உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covaxin, COVID-19 Second Wave, Covid-19 vaccine, Covishield