காலதாமதமாக விமானங்களை இயக்குவது, தரமற்ற சேவை என ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் ஒரு காலத்தில் உலகிலேயே மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு அந்நிறுவனம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
1990- ஆம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த சதாம் உசைன், குவைத் நாட்டின் மீது போர் தொடுத்தார். எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை அதிகரிக்க வேண்டும் என்பது சதாம் உசைனின் உத்தரவாகஇருந்தது. குவைத்தின் எண்ணெய் வளங்களை அபகரிப்பதும் சதாம் உசைனின் திட்டமாக இருந்தது. குவைத் இதற்கு செவி சாய்க்காததால் 1990- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2- ஆம் தேதி குவைத் மீது போர் தொடுத்தார் சதாம் உசைன். போருக்கு மத்தியில் குவைத்தின் ராஜகுடும்பம் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றது. குவைத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த 1.7 லட்சம் இந்தியர்களை மீட்கும் பொறுப்பு, மத்திய அரசு மீது விழுந்தது.
அப்போது இந்திய பிரதமராக இருந்த வி.பி.சிங், சதாம் உசைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளை அனுப்பினார். குவைத்திலிருந்து தப்பிச் சென்ற இந்தியர்கள் ஜோர்டானின் அமான் நகரில் பள்ளிகள் மற்றும் சமுக கூடங்களில் தஞ்சமடைந்தனர். போர் தொடுத்த 12 நாள்களுக்கு பிறகு மீட்பு நடவடிக்கைகள் தொடங்கின. தாமதமான நடவடிக்கை குறித்து மக்கள் கடும் கோபத்தில் இருக்க அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை, அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஐ.கே.குஜரால் மேற்கொண்டார்.
இந்தியர்கள் யாரும் உக்ரைன் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்படவில்லை: மத்திய அரசு விளக்கம்
முதல் கட்டமாக இந்திய ராணுவ விமானங்கள் மூலம் குழந்தைகளும் வயதானவர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் மீட்பு நடவடிக்கைகளில் ஏர் இந்திய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கேரள அரசும் தன் பங்குக்கு, சிக்கிக் கொண்டவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி உதவியது. 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14- ஆம் தேதி ஏர் இந்தியாவின் முதல் விமானம் மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக தொடங்கியது. அன்று முதல் 59 நாள்களில் 488 விமான சேவைகளின் மூலம் 1.76 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். இதுவே இன்று வரை உலக அளவில் மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.