ஹோம் /நியூஸ் /இந்தியா /

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வதால் என்ன மாற்றம் ஏற்படும்?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வதால் என்ன மாற்றம் ஏற்படும்?

கோப்புப்படம்

கோப்புப்படம்

பாண்டிச்சேரி மற்றும் டெல்லி அரசுகள் இயங்குகின்றனவோ, அதே போல அதிகாரம் குறைந்து காஷ்மீர் அரசு செயல்படும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு இன்று முடிவெடுத்துள்ளது. இதனால், என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்...

இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான், காஷ்மீரை ஆக்கிரமிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு ஆண்ட மன்னர் ஹரிசிங், இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். 1956-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்த்து காரணமாக வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், காஷ்மீரின் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே, அங்கு அமலாகும்.

வெளி மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது. மற்ற மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், அங்குமட்டும் அது 6 ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்படுகிறது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (லட்சத்தீவுகள், அந்தமான் போன்று), ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (புதுச்சேரி, டெல்லி போல) மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து பறிபோனதால், இனி காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியும். இந்திய எல்லைக்குள் உள்பட்ட மற்ற மாநிலங்கள் போன்றே காஷ்மீரும் கருதப்படும். நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.

காஷ்மீரின் எல்லைகள் மாற்றியமைக்கலாம். மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் 5 ஆகும். மேலும், யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதால் காவல்துறை, நில அதிகாரம் என்று பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வந்துவிடும்.

எப்படி, பாண்டிச்சேரி மற்றும் டெல்லி அரசுகள் இயங்குகின்றனவோ, அதே போல அதிகாரம் குறைந்து காஷ்மீர் அரசு செயல்படும்.

Published by:Sankar
First published:

Tags: Article 370, Jammu and Kashmir, Kashmir