தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்ட
பாஜக தலைவரின் உடலை, நாயில் அழுகும் சடலத்துடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவினரை குறிவைத்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறைகளின் போது தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மனஸ் சஹா என்பவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்தில் வைத்து சிலர் தாக்கினர். இந்த தாக்குதலில் பாஜக தலைவர் மனஸ் சஹாவிற்கு தலையில் காயங்கள் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கியாசுதின் மொல்லா என்பவரின் ஆதரவாளர்களால் தான் மனஸ் தாக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சுமத்தினர்.
இதனிடையே காயத்திற்காக தாகுர்புகுர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் மனஸ் சஹா பரிதாபமாக உயிரிழந்தார் அவருடைய உடலை மம்தா பானர்ஜி வீட்டருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் சுகம்தா மஜும்தர் தலைமையிலான பாஜகவினர் நேற்று முயன்ற போது அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
Also Read:
‘தவறு செய்தால் கை வெட்டப்படும்’.. தாலிபான்களின் கொடூர தண்டனைகள் விரைவில் அமல்!
இந்நிலையில், மரணமடைந்த மனஸ் சஹாவின் உடலை இறந்த நாயின் அழுகும் உடலுடன் ஒப்பிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக சமூக ஊடக பிரிவின் தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் வன்முறையின் போது காயமடைந்து மரணமடைந்த பாஜக வேட்பாளரின் உடலை நாயின் அழுகும் உடலுடன் ஒப்பிட்டு மம்தா பானர்ஜி பேசியிருப்பது வெட்கக்கேடானது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்காணிப்பது போதாது என, அவர் தனது உணர்ச்சியற்ற தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.” இவ்வாறு அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
Also Read:
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு – முழு விவரம்!
இந்த ஆண்டு மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடந்தது. அன்றைய தினம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றபோது அக்கட்சிக்கான வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பாஜகவினரை குறிவைத்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்குகள் தற்போது சிபிஐ மற்றும் சிறப்பு விசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.