மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கி வைத்து, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளதால், அம்மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. அண்மையில், ஆளுநர் ஜக்தீப் தன்கரை மம்தா பானர்ஜி ட்விட்டரில் பிளாக் செய்தார். இந்நிலையில், மாநிலங்களவையில் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.
இவ்வாறு ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்துவரும் சூழலில் திடீர் திருப்பமாக மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கி, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊர் சுற்றலாம் வாங்க! டெல்லியிலிருந்து லண்டன் வரை அழைக்கும் சுற்றுலா நிறுவனம்.! கட்டணம் தெரியுமா.?
திரிணமுல் கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால், அரசுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில அரசின் பரிந்துரை அடிப்படையில் தான், ஆளுநர் சட்டப்பேரவையை முடக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.