Home /News /national /

பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஜக்தீப் தங்கர் தேர்வு..'விவசாயி மகன்' என பிரதமர் மோடி புகழாரம்!

பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஜக்தீப் தங்கர் தேர்வு..'விவசாயி மகன்' என பிரதமர் மோடி புகழாரம்!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கர்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கர்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் பதவியை ஜக்தீப் தங்கர் விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர் போட்டியிடுவார் என, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து உள்ளார். தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது .

    இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஜெக்தீப் தங்கர் போட்டியிட உள்ளதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ள ஜெக்தீப் தங்கருக்கு வயது 71. ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த தங்கர், மத்திய அமைச்சராகவும், எம்பியாகவும் பதவி வகித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் பதவியை, அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விவசாயி மகனான ஜக்தீப் தங்கரின் சிறந்த பண்பை அனைவரும் அறிவார்கள். சட்டம், ஆட்சி உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த அனுபவம் கொண்டவர். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நலனுக்காக அரும்பாடுபட்டவர். அரசியல் சாசனத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட ஜக்தீப் தங்கர் நாடாளுமன்ற விவகாரங்களில் ஞானம் கொண்டவர். எனவே, மாநிலங்களவை தலைவராக சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பார். இவர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றுள்ளார்.


    ஜக்தீப் தங்கர் ஏன்

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்தீப் தங்கர் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த சமூகம், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் வசிக்கிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போரட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்கள் ஜட் சமூகத்தினரே. சீக்கியர்களில் ஜாட் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இவர்களின் போராட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தை தவிர ஏனைய மாநிலங்களில் ஜாட் பிற்படுத்தப்பட்ட சமூகமாக உள்ளது. ராஜஸ்தானிலும் ஜக்தீப் தங்கரின் முன்னெடுப்பால் மாநில அளவில் ஜாட் சமூகம் ஓபிசி அங்கீகாரம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: குஜராத் அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார் அகமது படேல்.. நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த சிறப்பு விசாரணைக் குழு

    மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி  நடைபெற்றுவரும் நிலையில்,2023 சட்டப்பேரவைத் தேர்தல் கணக்கையும் பொருத்தி பார்க்கும் போது ஜக்தீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக பாஜக மீதான ஜாட் சமூகத்தின் அதிருப்தியை மேலும் மட்டுப்படுத்தி, 2024 மக்களவை தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் இந்த சமூகத்தின் ஆதரவை கணிசமாக பெறுவதே பாஜகவின் தொலைநோக்கு திட்டமாக இருக்கும். எனவே தான், விவசாயி மகனான ஜக்தீப் தங்கரை பாஜக தனது வேட்பாளராக களமிறக்குகிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்றாக உள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Narendra Modi, PM Modi, President Election, Vice President

    அடுத்த செய்தி