திரும்பும் வரலாறு: பாஜகவில் இருந்து மீண்டும் மம்தா கட்சிக்கு திரும்பும் தலைவர்கள்..

மம்தா பானர்ஜி

மம்தாவுக்கு முன்னர் நெருங்கியவராக விளங்கியவரும் தற்போது பாஜக தேசிய துணை தலைவராக இருப்பவருமான முகுல் ராய் கூட திரிணாமுலுக்கு தாவலாம் என தகவல்கள் கூறுகின்றன.

  • Share this:
மேற்குவங்கம், தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த மே மாதத்தில் புதிய அரசுகள் ஆட்சியமைத்துள்ளன. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் அரங்கேறியது.

முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியாமல் மோசமான தோல்வியை பதிவு செய்தன.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும், முந்தைய தேர்தலில் வெறும் 3 சீட்கள் மட்டுமே பெற்றிருந்த பாஜகவுக்கும் தான் நேரடி மோதல் இருந்தது. போதாக்குறைக்கு மம்தாவின் வலதுகரமாக திகழ்ந்த சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு கடந்த டிசம்பரில் தாவிய பின்னர் மேற்குவங்க அரசியல் உச்சகட்ட பரபரப்பை சந்தித்தது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என ஒரு பெரும் படையே பாஜக பக்கம் தாவியது. இருப்பினும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. 77 தொகுதிகளை கைப்பற்றி மாநிலத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை பாஜக பெற்றது. இருப்பினும் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

Also Read:   Jitin Prasada: நிரந்தர தலைவர் கோரி சோனியாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

மம்தா மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய தலைவர்கள், தற்போது மீண்டும் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவ வரிசைகட்டி நிற்கின்றனர்.

தீபேந்து பிஸ்வாஸ், சோனாலி குஹா, சர்லா முர்மு


முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏக்கள் என பலரும் திரிணாமுல் காங்கிரஸில் இணைவதற்காக மம்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் சிலர் பாஜகவுக்கு தாவியதற்காக மன்னிப்பு கேட்டிருக்கின்றனர். இருப்பினும் மம்தா, கட்சி தாவியவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதற்கான க்ரீன் சிக்னலை இன்னமும் கொடுக்கவில்லை.

மம்தாவுக்கு முன்னர் நெருங்கியவராக விளங்கியவரும் தற்போது பாஜக தேசிய துணை தலைவராக இருப்பவருமான முகுல் ராய் கூட திரிணாமுலுக்கு தாவுவதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் முகுல் ராயின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அவரை மருத்துவமனையில் பார்க்க சென்றார். இதன் காரணமாக முகுல் ராய் கூட கட்சி தாவலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் அமைச்சர் ரஜீப் பானர்ஜி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தீபேந்து பிஸ்வாஸ், சோனாலி குஹா, பிரபிர் கோஷல், சர்லா முர்மு ஆகியோர் ஏற்கனவே மம்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மற்றொரு தலைவரான அமோல் ஆச்சார்யா திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Published by:Arun
First published: