பிரதமர் மோடியை 30 நிமிடம் காக்க வைத்தாரா மம்தா பானர்ஜி? - தலைமைச் செயலாளர் டெல்லிக்கு அழைப்பு.. மேற்குவங்கத்தில் உச்சகட்ட பரபரப்பு!

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் பிரதமரிடம் அளித்துவிட்டு 15 நிமிடங்கள் பிரதமரை தனியாக சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

  • Share this:
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி உடனான யாஸ் புயல் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயலானது ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிடுவதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார். முதலில் விமானம் மூலம் ஒடிசா சென்ற பிரதமர் மோடி அங்கு முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின்னர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மற்றும் மேற்குவங்கத்திற்கு சீரமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் உடனடியாக 1000 கோடி ரூபாயை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இதில் ஒடிசாவிற்கு 500 கோடியும், மேற்குவங்கத்திற்கு 500 கோடியும் வழங்கப்படும் என அறிவித்தார்.

புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், தீவிரமாக காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஒடிசாவை தொடர்ந்து மேற்குவங்கத்திற்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி அங்கும் வெள்ள சேத பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். இதன் பின்னர் நேற்று மதியம் முதல்வர் மம்தா பானர்ஜியுடனான யாஸ் புயல் ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆய்வுக் கூட்ட அரங்கில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மம்தா பானர்ஜி பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் பிரதமரிடம் அளித்துவிட்டு 15 நிமிடங்கள் பிரதமரை தனியாக சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமருடனான சந்திப்பின் போது மேற்குவங்கத்திற்கு 20,000 கோடி ரூபாயை புயல் சேதமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் பிரதமருடனான புயல் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி கலந்து கொண்டதால் தான் அவர் பிரதமருடனான கூட்டத்தை புறக்கணித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.இந்த களேபரத்துக்கு மத்தியில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாவை உடனடியாக டெல்லியில் உள்ள பணியாளர் பயிற்சி மையத்திற்கு வந்து பணியில் சேரும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இது குறித்து உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசிற்கு அனுப்பியுள்ள உத்தரவில் அலபன் பந்த்யோபத்யாவை உடனடியாக மாநில அரசு பணியில் இருந்து விடுவிக்கும்படி கூறியுள்ளது.

அலபன் பந்த்யோபத்யா முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான அதிகாரியாக அறியப்படுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அவருக்கு 3 மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பிறகும் மேற்குவங்கத்தில் அரங்கேறி வரும் நகர்வுகள் அரசியல் ரீதியிலான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Published by:Arun
First published: