WEST BENGAL ASSEMBLY ELECTIONS 2021 | ஜங்கல் மெகல் குத்மி பழங்குடியினர் ஆதிக்க 42 தொகுதிகளையும் பாஜகவிடம் இழக்கும் சூழல்- மம்தா கவலை

மம்தா-மோடி

ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளின் கூடாரமாக இருந்த மேற்கு வங்க ஜங்கல் மெகல் காட்டுப்பகுதி இன்று பாஜகவுக்கு பெரிய வாக்கு வங்கியாக மாறியுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளின் கூடாரமாக இருந்த மேற்கு வங்க ஜங்கல் மெகல் காட்டுப்பகுதி இன்று பாஜகவுக்கு பெரிய வாக்கு வங்கியாக மாறியுள்ளது.

  ஒன்று, இரண்டு தொகுதிகள் அல்ல, 42 தொகுதிகளையும் திரிணாமூல் வசமிருந்து பாஜக பறித்து விடும் சூழல் நிலவுவதால் திரிணாமுல் கட்சியின் கருத்தியலாளர்கள், ஆலோசகர்கள், ஏன் மம்தாவே கூட கவலை அடைந்துள்ளார்.

  10 ஆண்டுகளுக்கு முன்பாக இடதுசாரிக் கட்சிகளின் பிடியில் இருந்த இந்த பழங்குடி பெல்ட்டை மம்தா தன் வசமாக்கினார். இங்கு மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் 2008 முதல் 2011 வரை இருந்தது, வலுக்கட்டாய நில அபகரிப்பு, கந்து வட்டிக் கொடுமைகள் இருந்ததால் மாவோயிஸ்ட் எழுச்சி இங்கு வலுவாக இருந்தது.

  இந்தப் பகுதியில் முதலில் காங்கிரஸின் மூவர்ணக் கொடி, பிறகு மாவோயிஸ்ட்களின் கோபக்கனல் சிகப்பு வர்ணம் பிறகு திரிணாமுல் காங்கிரஸ்டின் பச்சை வெள்ளை இப்போது காவி நிறம் இங்கு புகுந்துள்ளது.

  பாஜக இங்கு செல்வாக்குப் பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கமே காரணம். பெங்கால், ஜார்கண்ட், ஒடிசா, சத்திஸ்கர், ஆகிய மாநில பழங்குடியினர் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகள் மற்றும் பிற சமூக நலத் தொண்டுகள் மூலம் செல்வாக்கு பெற்றது ஆர்.எஸ்.எஸ்.

  இந்த ஜங்கல் மெகலில் நடந்த கடந்த பஞ்சாயத்து தேர்தலில் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த பல சுயேச்சை வேட்பாளர்கள் மைய நீரோட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை தோற்கடித்தனர், திரிணாமுல், இடது சாரி வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வ நேரிட்டது. பாஜக கணிசமான வெற்றிகளைப்பெற்றது.

  பழங்குடியினரின் கோபத்தைப் புரிந்து கொண்ட திரிணாமுல் இங்கு ஜார்கிரம் தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சந்தால் பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது. ஆனாலும் பாஜக இவரை வீழ்த்தி தொகுதியைக் கைப்பற்றியது.

  ஜார்க்கண்ட் மாநில எல்லையில் புருலியா, பங்குரா, ஜர்கிராம், விஷ்ணுபூர், பிர்பும் மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களில் 42 சட்டப்பேரவையின் தொகுதிகள் உள்ளன.

  கடந்த 2014 மக்களவை தேர்தல் முதல் பாஜக இக்காட்டுப் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தியது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா, ஜங்கல் மெஹல் வாசிகளை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இங்கு தனது பிரச்சாரக் கூட்டங்களை அதிகமாக நடத்தினர். இதன் பலனாக, 2019 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு 47 சதவீத வாக்குகளுடன் இங்குள்ள எட்டு தொகுதிகளில் ஐந்து கிடைத்தன. சட்டப்பேரவை தொகுதிகளை கணக்கிட்டால் ஜங்கல் மெஹலின் 42 தொகுதிகளில் 31 பாஜக வசமானது.

  இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கு திரிணாமுல் பிராண்ட் அரசியல் எடுபடாமல் மக்கள் அதிருப்தி அலை பெருக பாஜக உள்ளே புகுந்தது.

  ஜங்கல் மெகலில் பாஜக நம்பியிருப்பது குத்மி இன பழங்குடிப்பிரிவினரையே. ஆனால் இதே பிரிவினர் ஜார்கண்டில் பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்களிக்கவில்லை. குடியுரிமைச் சட்டத்தினால் பாஜக அங்கு செல்வாக்கு இழந்தது. ஏனெனில் இவர்களிடம் ஜார்கண்டில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் எந்த ஆவணமும் இல்லை .

  30 லட்சம் குத்மிக்கள் உள்ளனர். ஆகவே திரிணாமுல், பாஜக இவர்கள் வாக்குகளை அள்ளுவதற்கு தலைகீழாக நின்று பார்க்கின்றனர். இந்த குத்மிக்கள், பீகாரின் குர்மி இனமக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

  ஜங்கல் மெகலின் குத்மி பிரிவுத் தலைவர் ஷிஷிர் அதிகாரி திரிணமூல் காங்கிரஸிலிருந்து மாநிலத்தின் முதல் தலைவராக பாஜகவில் இணைந்தார். இவரை தம் கட்சியின் எம்.பி.யாக்கி பாஜக அழகு பார்த்ததால் பலரும் மம்தாவிடம் இருந்து பாஜகவிற்கு தாவத் துவங்கினர். இந்த ஷிஷிர் அதிகாரியின் மகன் தான் சமீபத்தில் திரிணாமுலிலிருந்து பாஜகவுக்குத் தாவிய சுவேந்து அதிகாரி, இவர்தான் நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து நிற்கிறார்.

  இதனைச் சமாளிக்க மம்தா, தன் தேர்தல் பொறுப் பாளராக இங்கு முன்னாள் மாவோயிஸ்டான சத்ரதார் மஹதோவை நியமித்துள்ளார். மம்தாவின் மா, மாதி, மனுஷ் என்ற கோஷம் பழங்குடியினரின் ஜல், ஜங்கல், ஜமீன் போன்ற கோஷத்துடன் ஒத்துப் போகவில்லை.

  ஆனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் குத்மிக்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பதில் வாயைத் திறக்காமல் இருப்பதால் திரிணாமுல் பாஜக இரண்டுமே பதற்றமடைந்துள்ளன. சும்மாவா 20-25 லட்சம் வாக்குகள் என்றால் அரசியல் கட்சிகள் சும்மா விடுவார்களா? ரயில் நிலையங்களில் மக்கள் இறங்கிச் செல்லும் போது ஆட்டோக்காரர்களுக்கு பயணிகள் ‘சவாரிகள்’ ஆகி மொய்க்கத் தொடங்குவார்களே, அதே போல்தான் அரசியல்கட்சிகளும் அரசியல் வாதிகளும், ஒரு இனத்தில், சாதியில் மக்கள் தொகை அதிகமிருந்தால் இவர்களுக்கு ‘ஓட்டுக்கள்’ அவர்கள் மக்கள் அல்ல. உடனே ரயில் நிலைய ஆட்டோக்காரர்கள் போல் அந்த குழுவை மொய்த்து விடுவார்கள், தற்போது ஜங்கல் மெகலில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
  Published by:Muthukumar
  First published: