திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டிலிருந்து வாக்குப் பதிவு நாளன்று 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பறிமுதல் - மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு

மாதிரி படம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  இந்தியா முழுவதும் இன்று ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றுவரும் நிலையில் அசாம், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் இன்று 31 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் உலுபெரியா பகுதியில் வசிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கவுதம் கோஷின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரம் இன்று அதிகாலையில் கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் வாக்குப் பதிவு செய்வதில் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

  இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குப் பயன்படுத்தப்பட இருந்த இயந்திரம் என்பதால் அந்த இயந்திரத்தை பயன்பாட்டிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முயற்சி வெளிப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தீவிரமானது. ஏனென்றால் வாக்குப் பதிவு நடைபெறும் நாளன்று இது நடைபெற்றுள்ளது. தற்போது தெரிவதைவிட இந்த விவகாரம் பெரியது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: