மேற்குவங்கம், அசாம் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.... மேற்குவங்கத்தில் சுமார் 80 விழுக்காடும், அசாமில் 75 விழுக்காடும் வாக்குப் பதிவு....

வாக்காளர்கள்

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில், அசாமில் 75சதவீதமும், மேற்கு வங்கத்தில் 79 புள்ளி 79 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 • Share this:
  அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு நேற்றுவாக்குப்பதிவு நடைபெற்றது. 191 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், ஜர்கிராமில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

  இதனிடையே கந்தி தக்‌ஷன் மற்றும் கந்தி உத்தர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் தொடர்பாக முரண்பாடான அறிவிப்புகள் வெளியாகியதால், தேர்தல் ஆணையருக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதன்பின்னர் மாநில தேர்தல் அதிகாரியை சந்தித்து அக்கட்சி பிரமுகர்கள் புகார் அளித்தனர். அதேசமயம், திரிணாமுல் கட்சியினர் சில இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இரண்டாம் கட்ட வாக்குபதிவிற்கு கூடுதல் மத்திய படைகளை கேட்கவுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

  முன்னதாக பகவான்பூர் தொகுதிக்கு உட்பட்ட சட்சட்மல் பகுதியில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டனர். காயங்களுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் குற்றசாட்டியுள்ளனர்.

  இதனிடையே, சல்போனி தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுசந்தா கோஷ் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அங்குள்ள வாக்குச்சாவடியை பார்வையிட சென்ற அவரை, திடீரென ஒருவர் பின்புறம் இருந்து தாக்கினார். உடனடியாக சுசந்தாவின் பாதுகாவலர்கள் அவரை மீட்டு, காரில் ஏற்றினார். ஆனாலும், ஒரு கும்பல் காரையும் தாக்க முயன்றதால் சுசந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

  இதனைதொடர்ந்து கரக்பூரில் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, வங்காளத்தின் பெருமைகள் குறித்து பேசி ஒருசாராரிடம் வாக்கு திரட்டி வருவதாக விமர்சித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க... கேரளாவில் பாஜக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு - தேர்தலுக்கு முன்னரே 3 தொகுதிகளை இழந்தது பாஜக கூட்டணி!

  இதேபோன்று அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய், ஜோர்ஹத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், திப்ருகரில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், 100 இடங்களில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: