தேர்தல் வரவிருக்கும் குஜராத் மாநிலத்தின் ரூ.3050 கோடி வளர்ச்சிப் பணி திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர
மோடி வெள்ளிக்கிழமை, ஜூன் 10, 2022 அன்று மக்கள் நலனுக்கே எங்கள் அரசு தலையாய முன்னுரிமை அளிக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டதால்தான் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்றார் பிரதமர் மோடி.
“நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேலை செய்வதில்லை. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கடமையாற்றுகிறோம். எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பது என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்தான் எங்கள் அரசின் முன்னுரிமை.
குஜராத் மாநிலத்தில் கடந்த இரு பத்தாண்டுகளாக ஏற்பட்டுள்ள அதிவளர்ச்சி என்பது குஜராத்தின் பெருமை. கடந்த 8 ஆண்டுகளாக சப் கா சாத் சப் கா விகாஸ் என்ற கொள்கைக்கு இணங்க இந்த மாநில மக்களின் நலன்களுக்காகவே அதிக அழுத்தம் கொடுத்து பணியாற்றி வருகிறோம்” என்றார் மோடி.
குஜராத் மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடி 4வது முறையாக வந்திருக்கிறார், தேர்தலை முன்னிட்டு வளர்ச்சித் திட்டங்கள் ஜரூராக தீட்டப்பட்டு வருகின்றன. தெற்கு குஜராத்தில் பழங்குடியினர் வசிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி புதிய நீர் விநியோகத் திட்டங்களைத் துவங்கி வைத்தார்.
டாபி, டாங்ஸ் மற்றும் சூரத் மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் நீர் வழங்கல் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். "நவ்சாரி மாவட்டத்தில் சுமார் ₹542 கோடி செலவில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரியின் பூமி பூஜையையும் அவர் நிகழ்த்துவார், இது இப்பகுதி மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க உதவும்" என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இஸ்ரோவின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.