கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 90,855 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர். அவர்களில் 35,707 பேர் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை சமர்ப்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ஏழுமலையானுக்கு 4 கோடியே 17 லட்ச ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது.
சனி, ஞாயிறு வர விடுமுறை நாள்கள் முடிந்த நிலையில் இன்று பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. எனவே, இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 18 கம்பார்ட்மெண்ட்களில் மட்டுமே பக்தர்கள் காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் இலவச தரிசனத்திற்காக 48மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது. ஆனால் இன்று மக்கள் வருகை குறைந்து காணப்படுவதால் இலவச தரிசனத்திற்காக காத்திருப்பு நேரம் 6 மணியாக குறைந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு தான் தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கு விடுமுறை காலமும் சேர்ந்துள்ளதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:
67 நாள்களில் 26 நாடுகள் பயணம்: இந்தியா வந்தடைந்த சத்குருவுக்கு குஜராத் உற்சாக வரவேற்பு
அங்கு நிலவும் கூட்ட நெரிசலை கருதி பக்தர்கள் சில வாரங்கள் கழித்து திருப்பதி பயணத்தை திட்டமிட்டால் நலம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பக்தர்களின் தரிசன காத்திருப்பு நேரத்தை குறைக்கும் விதமாக வரும் புதன் கிழமை வரை விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதேபோல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உணவு, பிஸ்கட், பால், குடிநீர் உள்ளிட்ட பொருள்களை தடையின்றி இலவசமாக வழங்க தேவஸ்தானம் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.