ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்
தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, தீர்ப்பை வாசித்தார். அப்போது, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் முக்கிய மத நடைமுறை அல்ல என்றூ தெரிவித்த தலைமை நீதிபதி, ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.