மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் களம் பாஜக Vs திரிணாமுல் காங்கிரஸ் என்ற அளவில் பரபரப்படைந்துள்ள நேரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான போட்டியை சந்தித்து வருகிறார். இருதரப்பு தலைவர்களும் பொதுக்கூட்ட மேடைகளில் ஒருவரை ஒருவர் மாறி மாறி கருத்துக்களால் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் முதல்வர் மம்தா பானர்ஜியை ஆக்ரோஷமான வார்த்தைகளால் பேசியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, அன்றைய தினம் கோவில் ஒன்றில் வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தில் சிக்கி காயமடைந்தார். இது சதிச் செயல் என மம்தா கூறியதால் தற்போது மாநில குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கொல்கத்தாவில் காயத்திற்காக சிகிச்சை பெற்ற மம்தா, வீல் சேரில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி குறித்து புருலியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், “மம்தா பானர்ஜி காயமடைந்த அவரின் காலை வெளியே காட்ட நினைத்தால், அவர் சேலைக்கு பதிலாக பெர்முடாஸ் அணிந்து கொள்ளவேண்டும்” என பேசினார்.
மம்தாவுக்கு போடப்பட்ட பிளாஸ்டர் அகற்றப்பட்டுவிட்டது, பின்னர் ஒரு சிறிய பேண்டேஜ் போட்டிருந்தார். சேலை கட்டிக்கொண்டு ஒரு காலை மட்டும் வெளியே காட்டுகிறார். இது போல யாரும் சேலை உடுத்தியதை நான் பார்த்ததில்லை. உங்கள் காலை காட்ட வேண்டும் என நினைத்தால் பெர்முடாஸ் பேண்ட் அணிந்து கொள்ளுங்கள். அனைவராலும் நன்றாக பார்க்க முடியும்” என திலிப் கோஷ் பேசினார்.
மேலும், “பெங்கால் தனது சொந்த மகளை விரும்புகிறது” என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோஷத்தையும் திலிப் கோஷ் கிண்டலடித்து இது போன்ற ஒரு மகள் எங்களுக்கு தேவையில்லை என பேசினார்.
திலிப் கோஷின் இந்த பேச்சு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா, திலிப் கோஷை கண்டித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்குவங்க பாஜக தலைவர் பொதுக்கூட்டத்தில், மம்தா எதற்காக தனது காலை வெளியே காட்டுவதற்காக சேலை அணிகிறார். பெர்முடாஸ் அணியலாமே என்கிறார். இந்த வக்கிரமான மோசமான குரங்குகள் வங்காளத்தை வெல்லப் போகின்றன என்று நினைக்கின்றன” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
திலிப் கோஷின் பேச்சை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் திலிப் கோஷின் கருத்துக்களை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்று மூத்த பாஜக தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly election 2021, Election 2021, Mamata banerjee, West Bengal Assembly Election 2021