பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்ரே கூறியுள்ளார். கூட்டணியை விமர்சிப்பவர்கள் பால் தாக்ரேவை அவமதிப்பதாக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் சிவசேனாவும்-பா.ஜ.க-வும் முதன்முதலாக கூட்டணி அமைத்தன.
25 ஆண்டுகளாக இருந்த கூட்டணியில் 2014-ம் ஆண்டு முறிவு ஏற்பட்டது. இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டு பின்னர் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைத்தன.
அவ்வப்போது இருகட்சிகளும் முரண்பட்ட போதிலும் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் 2019- ஆம் ஆண்டு தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது இரண்டரை ஆண்டுகள் ஆட்சி என பிரித்துக்கொள்ள பாஜக உறுதி அளித்ததாக சிவசேனா கூறி வந்தது. அத்தேர்தலில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி கண்டன.
அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அமைக்க சிவசேனா உரிமை கோரியது. பாஜக இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பிறந்ததினத்தையொட்டி முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஆன்லைன் மூலம் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
Also read: சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!
அப்போது பாஜக-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டதாகவும் பாஜகவுடன் நண்பர்களாக இருந்தோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளதாகவும் கூறினார்.
தற்போது பாஜக கடைப்பிடிக்கும் இந்துத்துவா கொள்கை அதிகாரத்துக்காக மட்டுமே என்றும் தாக்ரே சாடினார். ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே பாஜக மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதாகவும், பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிவதுதான் அவர்களின் கொள்கை என்றும் அவர் விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவுடனான கூட்டணியை முடிவு செய்தது பால் தாக்ரே என்றும் கூட்டணியை விமர்சிப்பவர்கள் அவரை அவமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சியின் உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்தவர் இருந்த போது சிவசேனா கட்சியே தொடங்கப்பட்டிருக்கவில்லை என்றும் பட்னாவிஸ் கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது சிவசேனா, முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்ததாகவும், தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
பால் தாக்கரேவின் பிறந்ததினத்தையொட்டி சோனியா காந்தியிடமிருந்தோ, ராகுல் காந்தியிடமிருந்தோ ஒரு டிவிட்டர் பதிவை பெற்று விட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவை கூட்டணி வைத்து வளர்த்து விட்டது சிவசேனா கட்சி என்று கூறியுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பாபர் மசூதி பிரச்னையின் போது, வட மாநிலங்களில் போட்டியிட்டிருந்தால் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருந்திருப்பார் என்றும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
Also read... இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.