கர்நாடகா மகிந்திரா கார் ஷோரூமில் விவசாயியை அவமதித்து ஷோரூம் ஊழியர்கள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதன் உரிமையாளர் ஆனந்த் மகிந்திரா விவசாயிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்
கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி கெம்பேகவுடா. அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, சரக்கு வாகனம் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள மகிந்திரா ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது ஷோரூம் சேல்ஸ்மேனிடம் அவர் சரக்கு வாகனம் குறித்த விவரம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சேல்ஸ்மேன், சரக்கு வாகனத்தின் விலை ரூ.10 லட்சம் என்பதை மட்டும் கூறிவிட்டு, உன் சட்டை பையில் 10 ரூபாய் கூட இருக்காது எதற்காக நீயெல்லாம் இங்க வந்த என்று கூறியோதோடு அவரை வெளியே செல்லும்படியும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, விவசாயி கெம்பேகவுடாவுக்கும், சேல்ஸ்மேனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அந்த சேல்ஸ்மேன், முடிந்தால் ஒருமணி நேரத்தில் ரூ.10 லட்சத்தை கொண்டு வாருங்கள், இன்றேய தினமே சரக்கு வாகனத்தை டெலிவரி செய்கிறேன் என்று விவசாயிடம் சவால் விடுத்துள்ளார்.
Also read: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட விவசாயி கெம்பேகவுடா, அவரது நண்பரை தொடர்பு கொண்டு உடனடியாக ரூ.10 லட்சத்தை மகிந்திரா கார் ஷோருமூக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
சொல்லியபடி, ஒரு மணி நேரத்திற்குள் கெம்பேகவுடாவின் நண்பர் ரூ.10 லட்சத்தை ஷோரூமில் கொண்டு வந்து கொடுத்துள்ளார். சொன்னதை செய்து காட்டிய விவசாயி கெம்பேகவுடாவை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் செய்வது அறியாது திகைத்து நின்றனர். தொடர்ந்து, நீங்கள் கேட்டபடி, 1 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன், சரக்கு வாகனத்தை இன்றே டெலிவரி செய்யும்படி கெம்பேகவுடா கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த கார் ஷோரூம் சேல்ஸ்மேன் தன்னால் ஆன முயற்சியை எடுத்து பார்த்து விட்டு, சரக்கு வாகனத்தை இன்றே டெலிவிரி செய்ய முடியவில்லை என்று விவசாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, விவசாயி கெம்பேகவுடாவுக்கும் ஷோரூம் ஊழியர்களுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இது முற்றவே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்து, கெம்பேகவுடாவும், அவரது நண்பர்களும் அவமரியாதையாக நடந்துகொண்ட அந்த ஊழியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, அந்த ஊழியர் வேறு வழியில்லாமல் கெம்பேகவுடாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, விவசாயி கெம்பேகவுடா இந்த ஷோரூமில் தான் கார் வாங்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு, தான் கொண்டு வந்த 10 லட்சம் பணத்தை திரும்பி எடுத்துச்சென்றார்.
கர்நாடகாவில் உள்ள மகிந்திரா ஷோரூமில் நடந்த இந்த சம்பவம், தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து, மகிந்திரா நிறுவனர் ஆனந்த் மகிந்திராவுக்கும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் டேக் செய்து அவரிடம் நியாயம் கேட்டனர்.
இந்நிலையில், தனது நிறுவன ஊழியரின் செய்கையைக் கண்டித்து ட்வீட் செய்துள்ள ஆனந்த் மகிந்திரா, விசாரணை நடைபெறுவதாகவும், முன் களத்தில் உள்ள ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகிந்திரா ரைஸின் அடிப்படை நோக்கமே அத்தனை பங்குதாரர்களையும் எழுச்சி காண செய்ய வேண்டும் என்பதே. அதுமட்டுமல்லாது தனி நபரின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்பது நாம் கொண்டுள்ள பண்பு. இதற்கு ஏதேனும் பங்கம் வருமென்றால் அதற்கு அதிக முக்கியத்தும் கொடுத்து உடனடியாக கவனம் செலுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Also read: இனி அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறாது.. அதிரடியாக அறிவித்த முதல்வர் கெஜ்ரிவால்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.