பீகார் மாநிலம் பாட்னவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார் (20). இவர் அந்த கிராமத்தில் சலவை தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது கிராமத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக
குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் லாலன் குமார், தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும், அவரது ஜாமின் மனுவில், பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த, தனது தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த ஜாமின் மனுவை விசாரித்த ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த நூதன நிபந்தனையை அறிந்து, கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்ற உத்தரவு ’வரலாற்று சிறப்புமிக்கது’, இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
2012ம் ஆண்டு நாட்டையே அதிர்ச்சியடைய செய்த டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு நாட்டில் பாலியல் வன்கொடுமை சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது, எனினும் 2020ம் ஆண்டில் 28,000க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.