பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர
மோடிய ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்து பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பிரட்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களை இந்தியா மீட்டுவரும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போரிஸ், " இந்த இருவரையும் இந்தியா கொண்டு வருவதில் சட்ட ரீதியான சவால்கள் நிலவுகிறது. அதேவேளை, பிரிட்டன் அரசு இந்த இருவரையும் இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி, அங்கு உரிய வழக்கு விசாரணை நடத்தவே பிரிட்டன் விரும்புகிறது. எங்கள் நாட்டில் திறமை மிக்க சிறந்த நபர்களையே வரவேற்க விரும்புகிறோம். மாறாக எங்கள் சட்டத்தை வைத்து தங்கள் குற்றத்திலிருந்து தப்ப நினைப்பவர்களை நாங்கள் ஒருபோதும் வரவேற்க மாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க:
எதிர்க்கட்சி நடத்திய இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதீஷ் குமார் - பிகார் அரசியலில் பரபரப்பு
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிருங்லா, "பொருளாதார குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டு அவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதே இந்திய அரசின் நோக்கம். இது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேசப்பட்டது.
பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்த விவகாரத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும். பிரிட்டன் அரசு சார்பில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்துள்ளார்" என அவர் கூறினார். விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் முகுல் சோக்ஸி ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் மூலம் செய்த மோசடியில் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,585.83 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.