எனக்கு ஏற்பட்ட அநீதியை தர்மடம் மக்கள் தெரிந்துக்கொள்ளட்டும் - பினராயி விஜயனை எதிர்க்கும் ‘வாளையார் சிறுமிகள்’தாய்

எனக்கு ஏற்பட்ட அநீதியை தர்மடம் மக்கள் தெரிந்துக்கொள்ளட்டும் - பினராயி விஜயனை எதிர்க்கும் ‘வாளையார் சிறுமிகள்’தாய்

பினராயி விஜயன்

கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல்வரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார். பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதியில் அவரை எதிர்த்து நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

 • Share this:
  மகள்களை இழந்து மொட்டையடித்துக்கொண்டு நீதி கேட்டு அலையும் அவலம் என்னுடன் முடிந்துபோகட்டும். வேறு எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற வேதனையோடு அரசியல் களம் புகுந்துள்ளார் ஒரு ஏழைத்தாய். கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் வாளையார் சிறுமிகளின் தாய். கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் அட்டம்பள்ளம் சேர்ந்தவர்தான் இந்தப்பெண். தன் மகள்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிக்கேட்டு அரசியல் களம் புகுந்துள்ளார்.

  2017-ம் ஆண்டு இந்த ஏழைத்தாயின் வாழ்க்கையை திருப்பிப்போட்ட வருடம். ‘வாளையார் சிறுமிகள்’ என்ற வார்த்தை ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. 2017 ஜனவரி மாதம் 14 வயது சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்படுகிறாள். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டனர். சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை அவர்களால் கண்டறியமுடியவில்லை. 14 வயது சிறுமி இறந்த அடுத்த 52 நாள்களில் அவளின் 9 வயது தங்கை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்படுகிறாள். அந்தக்குடும்பமே இடிந்துப்போய் விட்டது. கேரளாவையே உலுக்கியது இந்த மரணங்கள்.

  வாளையார் சிறுமிகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகின. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தியது கேரள காவல்துறை. சிறுமிகளின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் இருவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. போலீஸாரின் விசாரணையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளின் உறவினர் ஒருவரும் கைதாகினார். போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  ஏழைகளுக்கு நீதி எட்டாக்கனியாக இருக்கும் என்பது போல் சிறுமிகள் மரணத்தில் தொடர்புடைய மூவரும் விடுவிக்கப்பட்டனர். மகள்களுக்கு நீதி வாங்கித்தர முடியவில்லை என்ற விரக்தியில் தலையை மொட்டையடித்துக்கொண்ட அந்த தாய் போராட்டத்தை முன்னெடுத்தார். இந்நிலையில் கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல்வரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார். பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதியில் அவரை எதிர்த்து நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தப்பெண், “ நான் என் விதியை எதிர்கொள்கிறேன். எனக்கு எதாவது ஏற்பட்டால் அதற்கு காரணம் அமைச்சர் ஏ.கே.பாலனும் அவருடைய கட்சியும்தான் முழுப்பொறுப்பு. பினராயி விஜயனை எதிர்த்து வெற்றிப்பெற வேண்டும் என நான் தர்மடத்தில் போட்டியிடவில்லை. எனக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை என முதல்வரிடம் கேள்வி கேட்க இது எனக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. எனக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் நான் அனுபவித்த துன்பங்களை இந்த தர்மடம் மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்” என வேதனையுடன் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: