குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மிக முக்கிய பிரபலங்களின் பாதுகாப்பு தொடர்பான விதிகள் மறு ஆய்வு செய்யப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பாகிஸ்தான், சீனா குறித்தும் அவர் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து Mi-17V5 ரக ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 இதர ராணுவ அதிகாரிகள் கடந்த 8-ம்தேதி பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் குன்னூர் ராணுவப்பயிற்சி கல்லூரிக்கு 10 கிமீ தொலைவில், மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.
இந்தச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 11 இதர ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங், கடந்த புதன் அன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க : மறைந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு வந்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ
ராணுவத்தின் உச்ச பொறுப்பில் இருக்கும் அதிகாரி, ஹெலிகாப்டரில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவீன ரக ஹெலிகாப்டர் அவரது பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட போதிலும், விபத்து ஏற்பட்டது விமர்சனத்தை உண்டாக்கியது.
இதையும் படிங்க : பாஜகவின் இந்துத்துவா கொள்கை வெளிநாட்டு இறக்குமதியாகும்- சத்தீஸ்கர் முதல்வர் தாக்கு
மேலும், விவிஐபிக்களின் பயணம் மேற்கொள்ளும்போது, கூடுதல் கவனம் தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் விமானப்படை தலைமை தளவதி வி.ஆர். சவுத்ரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் துரதிருஷ்வசமானது. இதற்கு பின்னர், மிக முக்கிய பிரபலங்களின் பயணம், பாதுகாப்பு குறித்த விதிகளை ஆய்வு செய்துள்ளோம். அவை மாற்றி அமைக்கப்படும். பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்திய விமானப்படை மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மார்ச் 2017-க்கு பின்னர் 15 முறை ராணுவ ஹெலிகாப்டர் விபத்துள்ளாகி இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இந்தோ-பாக் யுத்தத்தின் 50வது ஆண்டு: பிபின் ராவத் பேசிய கடைசி உரை வெளியீடு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.