வட இந்தியாவில் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு..

மாதிரிப்படம்

உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா, மதுரா, ஃபிரோசாபாத் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது

 • Share this:
  உத்தரப்பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 60 பேர்  உயிரிழந்துள்ளனர்.

  உத்தரப்பிரதேசத்தில் காணப்பட்ட டெங்கு மற்றும் ஒருவகை மர்மக்காய்ச்சல் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோஷாபாத்தில் செப்டம்பர் 14-ம் தேதி வரை இந்த காய்ச்சலுக்கு 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்னும் அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. கடுமையான காய்ச்சலுடன் குழந்தைகளுக்கு  மூட்டுவலி, குமட்டல், உடலில் ஆங்காங்கே வீக்கம் உள்ளிட்டவையும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனக் கூறுகின்றனர்.

  உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா, மதுரா, ஃபிரோசாபாத் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. இது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து பீகார், மத்தியப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த காய்ச்சல் இப்போது பரவியுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 97 பேர் இந்த காய்ச்சல் அறிகுறியுடன் காணப்படுகின்றனர்.  ஃபிரோசாபாத்தில் மர்மகாய்ச்சல் காரணமாக 465 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்ராவில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரக்பூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  மும்பையில் செப்டம்பர் மாதம் 85 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி  வீடு வீடாக சுகாதார பணியாளர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் கடுமையான  காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடுமையான காய்ச்சல் காரணமாக  2 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்களின் கிராமத்துக்கு விரைந்த சுகாதார பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

  மத்தியப்பிரதேச  மாநிலம் இந்தூரில் இதுவரை 139 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுள்ளனர்.  மேற்கு வங்கத்தில் சிலிகுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. சிலிகுரி மாவட்ட மருத்துவமனையில் 70 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 70 குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் 5 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள் என குழந்தைகள் நல மருத்துவர் சுபீர் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: