வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

”என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. இனி செய்வதற்கு எதுவுமில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டார் வாஜ்பாய்”

வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!
மாதவராவ் சிந்தியா உடன் ராஜீவ் | ஜோதிர்தியா சிந்தியா உடன் ராகுல்
  • News18
  • Last Updated: March 11, 2020, 2:17 PM IST
  • Share this:
வெற்றி உறுதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னபோது உற்சாகமாக இருந்தது வாஜ்பாய்க்கு. குவாலியரில் அவரை எதிர்த்து வலுவான வேட்பாளர் எவரும் நிற்கவில்லை. ஆக, தொகுதி பற்றிக் கவலையில்லை, கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்ய அதிக நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.

வாஜ்பாய்க்கு வசதியான தொகுதி புதுடெல்லிதான். கடந்த தேர்தலில்கூட அங்கிருந்துதான் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்திரா படுகொலைக்குப் பிறகான தேர்தலில் அனுதாப அலை ஆவேசமாக வீசிவருகிறது. யாராக இருந்தாலும் அடித்துச்செல்லப்படுவார். ஆகவே டெல்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் கட்சிக்காரர்கள். வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதியைத் தேடினார்கள். குவாலியர் என்று முடிவானது.

வாஜ்பாய்க்கு இரட்டை மகிழ்ச்சி. இந்துத்துவ ஆதரவாளர்கள் அதிகமுள்ள தொகுதி அது. வாஜ்பாய் பிறந்ததும் குவாலியரில்தான். போதாது? மண்ணின் மைந்தருக்கே வெற்றி மாலை என்று சொல்லி வாஜ்பாயை உற்சாகப்படுத்தினார்கள் சக தலைவர்கள். அமைதியாக ஆமோதித்தார் வாஜ்பாய். வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார்.


ராகுல் காந்தி உடன் சிந்தியா


பிரசாரத்துக்கு நடுவே அவருக்கு ஒரு செய்தி வந்தது. மறுநொடி வாஜ்பாயின் முகத்தில் சோக ரேகைகள். கூடவே கொஞ்சம் பதற்றம். விஷயம் இதுதான். இளவரசர் மாதவராவ் சிந்தியா குவாலியரில் போட்டி!

நெற்றியைச் சுருக்கினார் வாஜ்பாய். காரணம், மாதவராவ் சிந்தியாவின் சொந்தத் தொகுதி குணா. குவாலியருக்குப் பக்கத்துத் தொகுதி. கடந்தமுறைகூட அவர் அங்கிருந்துதான் வெற்றிபெற்றிருந்தார். இப்போதும் அங்குதான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். குணா தொகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பரங்களில் எல்லாம் சிந்தியாவே சிரித்துக்கொண்டிருந்தார். காங்கிரஸின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலிலும் அவர் பெயரே இருந்தது.எனில், ஏன் இந்த திடீர் மாற்றம்?

மாற்றத்தின் சூத்திரதாரிகள் இருவர். ராஜீவ் காந்தி மற்றும் மாதவராவ் சிந்தியா. குணாவில் பிரசாரம் செய்துகொண்டிருந்த மாதவராவ் சிந்தியாவின் மூளைக்குள் திடீரென ஒரு மின்னல் வெட்டு. சிங்கத்தை நாம் ஏன் சீண்டிப்பார்க்கக்கூடாது? நாம் ஏன் வாஜ்பாயை எதிர்த்து குவாலியரில் போட்டியிடக்கூடாது? மனத்தில் ஆயிரம் கணக்குகள் ஓடத் தொடங்கின. உடனே ராஜீவைச் சந்தித்தார். விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார். அதன் உள்ளர்த்தம் ராஜீவுக்குத் துல்லியமாகப் புரிந்தது.

எதிர்க்கட்சிகளின் வலிமை பொருந்திய தலைவர்களில் வாஜ்பாய் பிரதானமானவர். இந்திரா காங்கிரஸின் தீவிர விமர்சகர். பாஜகவின் வெற்றிக்கு வாஜ்பாயின் பிரசாரம்தான் அச்சாரம். தப்பித்தவறி பாஜக ஜெயித்துவிட்டால் அவர்தான் பிரதமர். அப்படிப்பட்ட ஆளுமையை நாடு முழுக்க பிரசாரம் செய்ய அனுமதிப்பது ஆபத்து. ஒரே தொகுதியில் முடக்குவதுதான் சரியான உத்தியாக இருக்கும். அதற்கு இளவரசர் சிந்தியா போன்ற காத்திரமான வேட்பாளர் களத்தில் இருக்க வேண்டும். ஆகட்டும் என்று சொல்லிவிட்டார் ராஜீவ்.

ராஜீவ் காந்தி பிறந்தநாளுக்கு சிந்தியா தெரிவித்த வாழ்த்து


ஆகப்பெரியவரிடம் இருந்து அனுமதி கிடைத்துவிட்டது. ஆனாலும் அமைதியாக இருந்தார் சிந்தியா. ஒருநாள் அல்ல. மூன்று நாள்கள். கனத்த அமைதி. குவாலியர் திட்டம் பற்றி யாரிடமும் மூச்சுவிடவில்லை. செய்தி கொஞ்சம் கசிந்தாலும் வாஜ்பாய் சுதாரித்துவிடுவார். தொகுதி மாறிவிடுவார். திட்டம் தோற்றுவிடும். ஆகவே, விஷயத்தை அரவமில்லாமல் அடைகாத்தார் சிந்தியா.

வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள். மதியம் மணி இரண்டரை. இன்னும் அரைமணி நேரமே மிச்சமிருந்தது. சட்டென்று குவாலியர் தொகுதி தேர்தல் அலுவலகம் நுழைந்தார் சிந்தியா. வேட்பு மனுவைக் கொடுத்தார். சாதித்த மகிழ்ச்சியோடு சடுதியில் வெளியேறினார். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. இனி செய்வதற்கு எதுவுமில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டார் வாஜ்பாய்.

தேர்தலின் முடிவில் சுமார் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாதவராவ் சிந்தியா வெற்றிபெற்றார். வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்வி இது.

வாஜ்பாயை வீழ்த்திய மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்ய சிந்தியாவைத்தான் தற்போது மோடி வசப்படுத்தியிருக்கிறார். அதுவும், மாதவராவ் சிந்தியாவின் பிறந்த நாளன்று!

அரசியல் சக்கரம் முன்னும் சுழலும், பின்னும் சுழலும்!
Also See...
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading