குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்? லிஸ்ட்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்

குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?

குஜராத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில்  நிதின் பட்டேல், மன்சுக் மாண்டவியா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 • Share this:
  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்ததாம் திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் விடுதி கட்டும் திட்டத்திற்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ரூபானி ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

  அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்ச்சர் நிதின் பட்டேல், கல்வித்துறை அமைச்சர் புபேந்தரசிங் சுடாஸமா, உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ருபானி, 2016ம் ஆண்டு முதல் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிவிட்டதால் பதவி விலகியதாகவும், முதலமைச்சர்களை மாற்றுவது பாஜகவில் இயல்பானது என்றும் கூறினார். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பட்டேலுடன் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை என்றும் விஜய் ருபானி பதிலளித்தார். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி புதிய தலைமையின் கீழ் புதிய ஆற்றலுடன் தொடர வேண்டும் என்றும் இதனை மனதில் வைத்து பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

  Also Read : முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்தது இதற்குதான் - எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி விளக்கம்

  அதேநேரம், மாநில அரசு கொரோனா தடுப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாதது மற்றும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முடியாததை மறைக்கும் விதமாக பாஜக தலைமை விஜய் ருபானியை பலி கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

  பாஜக தலைமையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் ருபானி செயல்படாததால் அவரை மாற்ற கட்சி தலைமை முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

  குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் ருபானி பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட ஜெயின் சமூகத்தை சேர்ந்த விஜய் ருபானி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் புதிய முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

  அதன்படி, துணை முதலமைச்சராக பதவி வகித்த நிதின் பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ருபாலா, மாநில பாஜக தலைவராக உள்ள சி.ஆர் பட்டேல், கோர்தன் ஜடாஃபியா உள்ளிட்டோரில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பி.எல். சந்தோஷ், பூபேந்தர் யாதவ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

  Also Read : புயலைக் கிளப்பிய பாதிரியாரின் ‘லவ் ஜிகாத்’ பேச்சு!

  பாஜகவில் அண்மையில் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, உத்தராகண்ட் முதலமைச்சர்களாக இருந்த திரிவேந்த்ர சிங் ராவத், தீரத் சிங் ராவத் ஆகியோரை தொடர்ந்து நான்காவதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி பதவி விலகியுள்ளார். இதன்மூலம் கடந்த 180 நாட்களில் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த 4 முதலமைச்சர்கள் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: