வெளிநாடு தப்பிச்செல்லும் முன் அருண் ஜெட்லியை சந்தித்தாரா விஜய் மல்லையா?

news18
Updated: September 12, 2018, 9:53 PM IST
வெளிநாடு தப்பிச்செல்லும் முன் அருண் ஜெட்லியை சந்தித்தாரா விஜய் மல்லையா?
விஜய் மல்லையா
news18
Updated: September 12, 2018, 9:53 PM IST
வெளிநாடு செல்வதற்கு முன்பு நிதி அமைச்சரை சந்தித்தாக தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ள நிலையில், அதை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். இதனிடையே மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாத நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் தப்பிச் சென்றார். அவரை இந்தியா கொண்டு வருவதற்காக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வெஸ்ட்மினிஸ்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துச் சென்றால் அவர் அடைக்கப்படும் சிறையின் வீடியோவை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மும்பை ஆர்தர் ரோடு சிறையில் மல்லையாவுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்த வீடியோவை இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாரே மோன்டோமேரி, தவறான தகவல் ஏதும் அளித்து வங்கிக் கடன் பெறவில்லை என்றும், கிங்பிஷர் நிறுவனத்தின் நிதிநிலைமையை கவனத்தில் கொண்டே வங்கி கடன் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், விஜய் மல்லையாவை அடைக்கவிருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையை அவசர கதியில் தூய்மைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நீதிமன்றத்தில் ஆஜாரான விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாடு செல்வதற்கு முன்பு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ஜெனிவாவில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சந்திப்புக்காக இந்தியாவிலிருந்து புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பு நிதி அமைச்சரை சந்தித்தேன். வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை தர தயாராக இருப்பதாக தெரிவித்தேன். இதுதான் நடந்த உண்மை” என்று கூறினார்.

இதனிடையே, லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறையின் வீடியோ நியூஸ்18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. விஜய் மல்லையாவை தங்கவைக்க ஒதுக்கப்பட்டுள்ள அறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 40 இன்ச் தொலைக்காட்சி, காலை நடைப்பயிற்சிக்கான பிரத்யேக இடம், உடற்பயிற்சி அறைகள், பிரத்யேக கழிவறை ஆகியவை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகள் மோசமான நிலைமையில் உள்ள நிலையில், மல்லையாவுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்