நாட்டின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் தேர்வுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவானது நடைபெறவுள்ளது. மாலை வாக்குப்பதிவு முடிந்த உடனே தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணிக்கையை தொடங்கி உடனே முடிவுகளை வெளியிடுவார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். நியமன உறுப்பினர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம். இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து எம்பிக்களின் வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த தேர்தலில் கட்சி கொறடா உத்தரவு ஏதும் இல்லை என்பதால், உறுப்பினர்கள் கட்சி ஆதரவு நிலைப்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தங்கள் விருப்பம் போல வாக்கு செலுத்தலாம்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்
தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்தீப் தங்கரை வேட்பாளராக அறிவித்தது.
71 வயதான ஜக்தீப் தங்கர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். முக்கியத்துவம் வாய்ந்த ஜாட் சமூகத்தின் முன்னணி முகமாக பார்க்கப்படுவர். இவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: 70 ஆண்டுகளாக காத்த ஜனநாயகத்தை 8 ஆண்டுகளில் பாஜக சிதைத்துவிட்டது - ராகுல் காந்தி விமர்சனம்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 80 வயதான மார்கரெட் ஆல்வா வேட்பாளாரக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளன.
இருப்பினும் எண்ணிக்கை பெரும்பான்மை படி, பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு தேவையான 515 வாக்குகளை எளிதில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் களம் கண்ட திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகள் பெற்று நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவரானார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.