Home /News /national /

Headlines Today : ஆகஸ்ட் 6-ம் தேதி துணை குடியரசுத்தலைவர் தேர்தல் - தலைப்புச் செய்திகள் (ஜூன் 30, 2022)

Headlines Today : ஆகஸ்ட் 6-ம் தேதி துணை குடியரசுத்தலைவர் தேர்தல் - தலைப்புச் செய்திகள் (ஜூன் 30, 2022)

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

Headlines Today : துணை குடியரசுத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது கட்டாயம் என, பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    காவிரி நீர் உரிமையை பெறுவதிலும், உரிமையை நிலைநாட்டும் வகையிலும் திமுக அரசு செயல்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நடப்பு கல்வியாண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 1,827 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்புக்கு விவசாயத் தொழிலாளர்கள் எதிர்ப்பால் பதற்றம் நிலவுவதால் 144 (3) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகம், புதுவை, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வருகிறார். மாலை, மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

    புதுக்கோட்டையில் பூப்புனித நீராட்டு விழாவிற்கு தாய்மாமன்கள், லாரியில் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு, ஊர் மக்கள் வியப்படைந்தனர்.

    வேலூரில் இருசக்கர வாகனத்திற்கும் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்ட சம்பவம் கேலிகுள்ளானதை அடுத்து இரவோடு இரவாக அச்சாலை அகற்றப்பட்டது.

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணனிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.

    சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு செல்போன் உரையாடல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகாரளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை பெருங்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள ஆல்பம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் புதிய முதலமைச்சராக பாஜகவின் பட்னாவிஸ் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தானில் தையல்காரர் தலை துண்டித்து கொல்லப்பட்டதைக் கண்டித்து 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை பாதுகாப்புடையினர் குண்டு வீசி அழித்தனர்.

    பள்ளி வளாகத்தில், வீடுகளில் தாய்மொழியை பேச மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    பிஎஸ்எல்விசி 53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை, இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்கியது.

    கேரள மாநிலம் கொச்சி அருகே அரபிக்கடலில் மூழ்கிய படகில் இருந்த 5 மீனவர்களை கடலோர காவல்படையினர் ஹெலிக்டாபர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் மகனுக்கு முத்தம் கொடுக்க முயன்ற போது, அதை தடுத்த மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்தார்.

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டர், மின்மோட்டார், எல்.இ.டி. விளக்குகள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இலங்கையில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்க, அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்தவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீனாவில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர்.

    கலிபோர்னியாவில் ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை ஊழியர்களின் பயன்பாட்டுக்கு திறந்துள்ளது.

    இத்தாலியில் நிலவும் கடும் வெப்பநிலையை சமாளிக்க விலங்குகளுக்கு உறைந்த பழங்கள், இறைச்சி மற்றும் மீன்கள் வழங்கப்படுகின்றன.

    Must Read : ஓலா கால்டாக்சி புக் செய்த நபர்கள் ஓட்டுநரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. சக கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கு, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக்குடியரசின், ஹரடேக்கா இணை முதல் சுற்றோடு வெளியேறியது.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை முகுருஸா, இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், நடப்புச் சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Headlines, Today news, Top News

    அடுத்த செய்தி