திரை இசை ஜாம்பவான் லதா மங்கேஷ்கர் பெயரில் வழங்கப்படும் முதல் விருதை வரும் ஏப்ரல் 20ஆம் தேதி பிரதமர்
மோடி பெறுகிறார்.
மறைந்த பின்னணி பாடகி லதா மகேஷ்கரின் நினைவாக இந்தாண்டு முதல் விருது வழங்கப்படும் என மங்கேஷ்கர் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வழங்கப்படும் முதல் விருதை பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார்.
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் தந்தை மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கரின் 80ஆவது நினைவு நாளான ஏப்ரல் 20ஆம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. லதா மங்கேஷ்கரின் சகோதரியான உஷா மங்கேஷ்கர் இந்த விருதினை வழங்கவுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும் அரும் பணியாற்றிய நபருக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்தாண்டு முதல் விருதானது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவை உலக அரங்கில் நிலை நிறுத்திய தலைவர் பிரதமர் மோடி ஆவர். பிரதமர் மோடியால் உந்தப்பட்டு நாடு அனைத்து துறைகளிலும் பெற்றுள்ள வளர்ச்சி அபாரமானது. ஆயிரம் ஆண்டுகளில் நாடு கண்டு கண்ட மிகச் சிறந்த தலைவர்களில் பிரதமர் மோடி ஒருவர்" என புகழாரம் சூட்டியுள்ளது.
மேலும் படிக்க: திருப்பதி கூட்டநெரிசலில் 3 பேர் காயம்: இலவச தரிசனத்துக்கு டோக்கன் வழங்கும் முறை ரத்து
பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் தனது 92 ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவையொட்டி இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் மத்திய அரசு அறிவித்தது.
இறுதி சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி மும்பை வந்து தனது மரியாதையை செலுத்தினார். அதே போல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சதுக்கத்திற்கு லதா மங்கேஷ்கரின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
மெலடி குயின், இந்தியாவின் நைட்டிங்கேல் எனப் போற்றப்படும் லதா மங்கேஷ்கர் 36க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார். மூன்று முறை தேசிய விருது வென்றுள்ள லதா மங்கேஷ்கர், திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சஹேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு வென்றுள்ளார். இவரின் திரை பங்களிப்பை பாராட்டி 2001ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
கர்நாடக சங்கீத ஜாம்பவான் எம்.எஸ் சுப்புலக்ஷ்மிக்குப் பின் இவ்விருதை பெற்ற இரண்டாவது பாடகி லதா மங்கேஷ்கர் ஆவார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவலியே விருது இவருக்கு 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.