ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது; மிகவும் ஏமாற்றமளிக்கிறது: சோனியா காந்தி வருத்தம்!

தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது; மிகவும் ஏமாற்றமளிக்கிறது: சோனியா காந்தி வருத்தம்!

சோனியா காந்தி - ராகுல் காந்தி

சோனியா காந்தி - ராகுல் காந்தி

5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மிக மோசமான சரிவை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது எனவும் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது எனவும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், “துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் நடைபெற்ற எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் செயல்திறன் மிகவும் ஏமாற்றமளித்தது, இது மிகவும் எதிர்பாராத ஒன்று. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி விரைவில் கூடி தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயும். ஒட்டுமொத்தமாக ஒரு கட்சியாக இந்த சரிவில் இருந்து பணிவுடன் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என சோனியா தெரிவித்தார்.

மேலும் மேற்குவங்கத்தில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கும், தமிழகத்தில் வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கும் அக்கூட்டத்தில் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மிக மோசமான சரிவை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது.

மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. அங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளையும், கடந்த முறை வெறும் 3 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 77 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

காங்கிரஸ் கட்சி வலிமையாக திகழும் அசாமில் ஓரளவு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. 95 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் அதில் 29ல் வெற்றி பெற்றது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளும் செயல்திறனை காட்டவில்லை. பாஜக தனித்து 50 இடங்களிலும் கூட்டணியாக 75 இடங்களிலும் வெற்றி பெற்று 2வது முறையாக அங்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது.

மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கேரளாவிலும் கோட்டைவிட்டுள்ளது. 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இடதுசாரிகள் மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் 41 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் மட்டும் தான் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. அக்கட்சி போட்டியிட்ட 25 இடங்களில் 18-ல் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும் புதுவையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது காங்கிரஸ். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி புதுவையில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

First published:

Tags: Congress, Election Result, Sonia Gandhi