கூடுதல் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்ப பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

கூடுதல் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்ப பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் மருந்துகளை அனுப்ப வேண்டும் எனவும் பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

  • Share this:
    கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் மருந்துகளை அனுப்ப வேண்டும் எனவும் பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

    நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், போதிய தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லாததால், மும்பையில் 26 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

    சதாரா, சாங்க்லி, பன்வல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்துக்கு இதுவரை ஒரு கோடி டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மகாராஷ்டிராவுக்கு ஒரு லட்சத்து நான்காயிரம் டோஸ் மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் டோப் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஒடிசா மாநிலத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளதால், 700 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கூடுதல் மருந்துகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில், தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பொய் பேசுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய மகாராஷ்டிரா அரசு மக்களை திசைதிருப்பவே, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுவதாக விமர்சித்துள்ளார்.

    Must Read : 5 லட்சம் கொரோன தடுப்பூசி டோஸ்களை மகாராஷ்டிரா அரசு வீணடித்துள்ளது : பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஹர்ஷ்வர்தன் சுகாதாரத்துறை அமைச்சர் போல் பேச வேண்டும் என்றும், அவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் இல்லை எனவும் காட்டமாக கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published: