வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த பிரதமர் மோடி, சாலையில் சென்ற பேரணிக்காக மொத்தம் 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை பிரதமர் மோடி இன்று தாக்கல் செய்தார். முன்னதாக, நேற்று மாலை வாரணாசிக்கு வந்த அவர் திறந்த வாகனத்தில் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டார்.
அவருக்கு சாலை நெடுகிலும் பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு மிகப் பெரும் வரவேற்பை அளித்தனர். ரோஜாப்பூக்களை தூவி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பேரணிக்காக வாரணாசியின் சாலைகளை கழுவ 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவிடப்பட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பிரதமரின் வருகையால் மூத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது செய்தோம்” என்று பதில் வந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலையை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் (Pic: The Telegraph/ Naeem Ansari)
மேலும், 400 நகராட்சி பணியாளர்கள் சாலையை சுத்தமாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி நகரில் 30 சதவிகிதம் பேர் குடிநீரை குழாய் மூலமாக பெற முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மீது தூவுவதற்காக டன் கணக்கில் ரோஜாப்பூக்கள் வாரணாசி நகருக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.