வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜூ தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், சீனிவாச ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியன்று (டிசம்பர் 18) நள்ளிரவு 12.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஏகாதசி தினமான டிசம்பர் 18 மற்றும் துவாதசி தினமான டிசம்பர் 19 ஆகிய 2 நாட்களும் ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு இருக்கும்.
டிசம்பர் 18, நள்ளிரவு 1.30 மணி முதல் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் காலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்களும் திருப்பதி மலைப் பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் 17-ம் தேதி காலை 10 மணி முதல் திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் அமர அனுமதி அளிக்கப்படும்.
வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் நிறைந்தபின், மற்ற பக்தர்கள் நாராயணகிரி பூந்தோட்டம், மாட வீதிகள் ஆகியவற்றில் அமைக்கப்படும் தற்காலிக ஷெட்டுகளில் தங்க வைக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 17 முதல் 20 வரை மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளும் தங்கு தடை இன்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் சீனிவாசராஜூ.
Also watch
Published by:DS Gopinath
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.