மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கேள்விகளை எழுப்பினார்.
மாநிலங்களவையில் வைகோ இன்று எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி எடுத்து பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோ துணைக்கேள்வி கேட்டார்.
அப்போது பேசிய வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சபையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்றார். அப்போது அவையில் இருந்த பிரதமர் மோடி மேஜையை தட்டி வரவேற்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ”பருத்தி விலை, பஞ்சு விலை திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி சூழ்நிலை ஏற்படுகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச் சூழல் விதிகளை முறையாக பின்பற்றுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி கேட்டார்.
வைகோ கேட்ட அந்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் கூற மறுத்துவிட்டார்.
தொடர்ந்து பேசிய வைகோ, “சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்துக்கு அனுப்புகின்றனர். பிறகு வங்கதேசத்தினர், வங்கதேச நாட்டு முத்திரை பதித்து இந்தியாவுக்குள் கொண்டு வந்து குவிக்கின்றனர். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?” என வைகோ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார். உடனடியாக வைகோ, உங்கள் பதிலில் திருப்தி இல்லை என கூறினார்.
Also Watch: எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் கேள்வி எழுப்பிய வைகோ
Published by:Anand Kumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.