கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி: மத்திய அரசு

தடுப்பூசி

அதேபோல், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் 3 மாதம் அவகாசத்திற்கு பின்னர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

 • Share this:
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்கள் வரை தடுப்பூசி போடத் தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி தொற்று பாதிப்புகள் குறைய தொடங்கிய நிலையில், தற்போது உயிரிழப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 267,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,529 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,496,330 ஆகவும், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 283,248 ஆகவும் அதிகரித்துள்ளது.

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா பரவலை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு அதிகளவில் தடுப்பூசி போடுவது மட்டுமே. அந்தவகையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

  இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு எப்போது தடுப்பூசி போடலாம் என்பது போன்ற முக்கிய ஆலோசனைகள் நடந்து வந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகு சில பரிந்துரைகளை மத்திய தடுப்பூசி நிபுணர்கள் குழு முன்வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, நிபுணர் குழுவின் பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

  அந்தவகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான புதிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்கள் வரை தடுப்பூசி போடத் தேவையில்லை. அதன்பிறகு வேண்டுமென்றால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் போட்டுக்கொள்ளலாம்.

  அதேபோல், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் 3 மாதம் அவகாசத்திற்கு பின்னர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

  மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி கட்டாயம் போடவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: