முகப்பு /செய்தி /இந்தியா / சித்தார்த்தா தற்கொலை... அரசை கடுமையாக விமர்சித்த விஜய் மல்லையா...!

சித்தார்த்தா தற்கொலை... அரசை கடுமையாக விமர்சித்த விஜய் மல்லையா...!

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

"வாங்கிய கடனை முழுவதுமாக அடைக்கிறேன் என, கூறியுள்ளேன். ஆனால், அதை ஏற்காமல், தொடர்ந்து வழக்குகள் மூலம் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்"

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காஃபி கஃபே டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அரசு அமைப்புகளும், வங்கிகளும் சொத்துக்களை முடக்குவதிலேயே கவனமாக இருப்பதாக விஜய் மல்லையா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல காஃபி கஃபே டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா நேற்று முன்தினம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டது, நிறுவன ஊழியர்களுக்கு கடைசியாக எழுதிய கடித்தத்தில், “வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர், எனக்கு நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்து வந்தார். கடன் கொடுத்தோரிடம் இருந்தும் நெருக்கடி வந்தது. இதற்கு மேல் அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது” என சித்தார்த்தா குறிப்பிட்டிருந்தார்.

சித்தார்த்தாவின் குற்றச்சாட்டை வருமான வரித்துறை நிராகரித்திருந்தது. இந்த நிலையில், வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா அரசு அமைப்புகளையும், வங்கிகளையும் கடுமையாக சாடி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டதால், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ள, தொழிலதிபர், விஜய் மல்லையா, சமூக வலைதளத்தில், ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “நானும், சித்தார்த்தாவும், தூரத்து வழியில் உறவினர்கள். அவர் மிகச் சிறந்த மனிதர், சிறந்த தொழிலதிபர். அவருடைய கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளேன். அரசு அமைப்புகளும், வங்கிகளும், இப்படித்தான் செயல்படுகின்றன. என்னுடைய வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை முழுவதுமாக அடைக்கிறேன் என, கூறியுள்ளேன். ஆனால், அதை ஏற்காமல், தொடர்ந்து வழக்குகள் மூலம் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில், வங்கிகளும், அரசுகளும், கடன் வாங்கியோர் அதை முழுமையாக செலுத்துவதற்கு உதவுகின்றன. ஆனால், என்னுடைய விஷயத்தில், கடனை திரும்பப் பெறுவதைவிட, என்னுடைய சொத்துக்களை முடக்குவதிலேயே அக்கறை காட்டுகின்றனர்” என்று மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: VG Siddhartha, Vijay Mallya