உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரில், கட்டடங்களில் ஏற்பட்ட விரிசல் தொடர்ந்து அதிகரிப்பதால், அங்குள்ள மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனிடையே உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஜோஷிமத் நகரின் நிலை பற்றி கேட்டறிந்தார்.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில், இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். சுமார் 17 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஜோஷிமத், இந்து மற்றும் சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்குச் செல்லும் நுழைவு வாயிலாக விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோதிமத் நகரில் நிலச்சரிவும், நிலநடுக்கமும் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இங்குள்ள கட்டடங்களில் ஏற்பட்ட விரிசல்கள் நாளுக்கு நாள் பெரிதாகியதால் மக்கள் கலக்கமடைந்தனர்.
விரிசல் படிப்படியாக பரவி தற்போது 600க்கும் மேற்பட்ட வீடுகளில் காணப்படுகிறது. வீடுகள் இடிந்து விழக்கூடும், அல்லது மண்ணில் புதையக் கூடும் என அச்சமடைந்த மக்கள் இதுவரை 65 வீடுகளை காலி செய்துவிட்டு, தற்காலிக முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு சில இடங்கள் திடீரென மண்ணில் புதையத் தொடங்கியது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒட்டுமொத்த ஜோஷிமத் நகரமே புதைந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சனிக்கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நிலத்தின் உள்ளே இருந்து தண்ணீர் கசிந்ததால் வீடுகளில் பெரிய விரிசல் ஏற்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது பேசிய முதல்வர் தாமி, விரிசல் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய கவுஹாத்தி இன்ஸ்டிட்யூட், ஐஐடி ரூர்க்கி மற்றும் இஸ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
இதனிடையே, ஜோஷிமத்தில் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வீதம் வீடு வாடகைக்காக, ஆறு மாதங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜோஷிமத் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோஷிமத் கோயிலிலும் பெரியளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நகரில் சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட, அது பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோஷிமத் பகுதியில் அனைத்து கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டடங்களே இந்த நிலைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Narendra Modi, Uttarkhand