ஹோம் /நியூஸ் /இந்தியா /

மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இமயமலை நகரம்...பீதியில் வெளியேறும் 600 குடும்பங்கள்..!

மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இமயமலை நகரம்...பீதியில் வெளியேறும் 600 குடும்பங்கள்..!

மண்ணுக்குள் புதையும் ஜோஷிமத் நகரம்

மண்ணுக்குள் புதையும் ஜோஷிமத் நகரம்

ஆபத்தான நிலையில் உள்ள 600 குடும்பங்களை நகரில் இருந்து வெளியேற்ற உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttarakhand (Uttaranchal), India

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் உள்ள ஜோஷிமத் என்ற நகரம் இயற்கை பேரிடர் அபாயத்தை சந்தித்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்த ஜோஷிமத் நகரம் இயற்கை மற்றும் ஆன்மீக சுற்றுலாவுக்கு பேர் போனது. கடந்த சில நாட்களாகவே இந்த நகரத்தின் பல பொது இடங்களிலும் வீடுகளிலும் நில வெடிப்புகளும், பெரும் வெடிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடர் காரணமாக ஒட்டுமொத்த நகரமே மண்ணுக்கு புதைந்து விடுமோ என்ற அபாய சிந்தனை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 15 நாள்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள், சாலைகளில் வெடிப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற தொடர் நிகழ்வுகளால் இதுவரை 40 குடும்பங்கள் நகரை விட்டு இடம் பெயர்ந்துள்ளன. திடீரென உருவான இந்த பேரிடரை சமாளிக்க மாநில அரசு தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உயிரை காப்பாற்றுவதே பிரதான இலக்கு. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக ஆபத்தான நிலையில் உள்ள 600 குடும்பங்களை ஜோஷிமத் நகரில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்த உள்ளோம். நீண்ட கால தீர்வுக்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்த நகரத்தில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என 1976ஆம் ஆண்டே அரசு உருவாக்கிய மிஸ்ரா குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் சுற்றுலாவை அதிகரிக்கும் நோக்கில் இங்கு ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் கட்டப்பட்டன.

இதையும் படிங்க: மீண்டும் மோசமடையும் காற்று மாசு...அவசர நிலையில் டெல்லி...முக்கிய பணிகளுக்கு தடை...!

மேலும், அங்கு வடிகால் கட்டமைப்பும் மோசமாக உள்ளதால், நீர் நிலைகளின் பாதையில் ஏற்பட்ட பாதிப்பே இது போன்ற பேரிடருக்கு காரணம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்து, நகரின் உட்கட்டமைப்பை முழுமையாக சீரமைக்க வேண்டும் என  அரசுக்கு நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Disasters, Uttarkhand