உத்தரகாண்டில் பயணிகள் பேருந்து நிலச்சரிவில் இருந்து தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் நிலச்சரிவு ஏற்பட்டு மலைகளில் இருந்து பாறைகள் கீழே உருண்டு வந்ததில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. பாறைகள் வேன் மீது விழுந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு வந்து பாலத்தின் மீதும் நதிகளில் விழும் காட்சிகளும் சமூகவலைத்தளத்தில் வெளியானது.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்மாநில அரசு பேருந்து மற்றும் ஒரு தனியார் வாகனம் நிலச்சரிவில் சிக்கியது. நிலச்சரிவில் பேருந்து மண்ணோடு மண்ணாக தரைமட்டமானது. மீட்புப்படைகளின் உதவியோடு பேருந்தில் பயணம் செய்தவர்களை மீட்டனர். அந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
இந்நிலையில் உத்தரகாண்டில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நூலிழையில் நிலச்சரிவில் இருந்து தப்பிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நைனிடால் மலைப்பகுதியில் 14 பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மெதுவாக மரம் செடி கொடிகளுடன் மண் சரியத் தொடங்கியது.
#WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers narrowly escaped a landslide in Nainital on Friday. No casualties have been reported. pic.twitter.com/eyj1pBQmNw
நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் மேற்கொண்டு பேருந்தை நகர்த்தாமல் வண்டியை நிறுத்திவிட்டார். பேருந்தை நிறுத்தியது தான் தாமதம் அதில் இருந்த பயணிகள் வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாக குதித்தும் பேருந்தை விட்டு வெளியேறினர். சிலர் இந்த காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளனர்.
ஒரு நிமிடத்தில் மண்சரிவு காரணமாக அந்த சாலையே மறைந்துவிட்டது. பேருந்து ஓட்டுநர் வாகனத்தை சில அடிகள் முன்னே நகர்த்தியிருந்தாலும் பெரிய விபத்தில் சிக்கியிருப்பார்கள். பேருந்து ஓட்டுநர் வண்டியை பின்நோக்கி நகர்த்தி பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.