உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு: இன்று மாலை பதவியேற்பு

புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று மாலை பதவியேற்கவுள்ளார்.

 • Share this:
  உத்தரகண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் மீது, கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்ததால், அவர் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினர். அதன்பிறகு புதிய முதல்வராக பெளரி கர்வால் எம்.பியான திரத் சிங் ராவத்தை, பா.ஜ.க தேசிய தலைமை நியமித்தது. சட்டப்பேரவை உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவேண்டும்.

  அந்தவகையில் திரத் சிங் ராவத், முதலமைச்சராக தொடர வேண்டுமானால் செப்டம்பர் 10ம் தேதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடத்தப்படுவது கேள்விகுறியானது. இதனிடையே பா.ஜ.க மேலிடம் அழைப்பை ஏற்று புதன்கிழமை டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவைச் சந்தித்த திரத் சிங் ராவத், பின்னர் டேராடூன் திரும்பியதும் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

  இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வுசெய்ய சனிக்கிழமை டேராடூனில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் மாநில பா.ஜ.க சட்டப்பேரவைத் தலைவராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார். புஷ்கர் சிங் தாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, அவரது கதிமா தொகுதி மக்கள் பட்டாசுகளை, வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனைதொடர்ந்து மாலையில் ஆளுநர் பேபி ராணி மவுரியாவை, முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். மக்கள் நலனுக்காக அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: