47 மொழிகளில் பேசக்கூடிய 'ஷாலு' ரோபோவை உருவாக்கி அசத்திய உ.பி. ஆசிரியர்!

47 மொழிகளில் பேசக்கூடிய 'ஷாலு' ரோபோவை உருவாக்கி அசத்திய உ.பி. ஆசிரியர்!

Robot

"தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக், அட்டை, மரம், அலுமினியம் போன்ற கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஷாலு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. இதனை உருவாக்க சுமார் ரூ.50,000 எனக்கு செலவானது"

  • Share this:
ஐ.ஐ.டி பம்பாயில் உள்ள கேந்திரியா வித்யாலயாவில் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் தினேஷ் படேல். இவர் ஜான்பூர் மாவட்டம் ராஜ்மல்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒன்பது உள்ளூர் மொழிகளையும் 38 வெளிநாட்டு மொழிகளையும் பேசும் ‘ஷாலு’ என்ற ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளார். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 9 இந்திய மொழிகளை இந்த ரோபோ பேசும். ரோபோ ஒரு பெண்ணை ஒத்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைகளை அசைப்பது போன்ற பல மனித சைகைகளை இந்த ரோபோவால் செய்ய முடியாது. ஆனால் கோபம், சிரிப்பு போன்ற உணர்ச்சிகளை இதனால் காட்ட முடியும். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் வெளியான பிளாக்பாஸ்டர் படமான எந்திரன், ஹிந்தியில் ‘ரோபோட்’ என்ற பெயரில் வெளியனானது. அதில் வரும் ரோபோ கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட படேல், ஹாங்காங்கின் ஹான்சன் ரோபாட்டிக்ஸ் உருவாக்கிய ‘சோபியா’ என்ற ரோபோவைப் போன்று 'ஷாலு’-வை உருவாக்கினார்.

இது குறித்து பேசிய ஆசிரியர் படேல், "தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக், அட்டை, மரம், அலுமினியம் போன்ற கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஷாலு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. இதனை உருவாக்க சுமார் ரூ.50,000 எனக்கு செலவானது" என்று தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு முன்மாதிரி என்றும் கூறியுள்ளார். ஷாலு ரோபாவால் ஒருவரை அடையாளம் காண முடியும், விஷயங்களை மனப்பாடம் செய்யும், பொது அறிவு, கணிதம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ரோபோவை குறித்து பேசிய அவர், “ஷாலு மக்களுக்கு வாழ்த்து செய்திகளைக் கூறும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், செய்தித்தாளை படிக்க முடியும், சமையல் குறிப்புகளைப் படிக்கும் மற்றும் பல செயல்களைச் செய்யும். இதனை பள்ளிகளில் ஆசிரியராகவும், அலுவலகங்களில் வரவேற்பாளராகவும் பயன்படுத்தலாம்.”என்று மேலும் கூறினார். இப்போது வரை ரோபோவின் முகத்திற்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் விரைவில் ஒரு நல்ல முகமூடியின் உதவியுடன் ரோபோவை அழகுபடுத்த முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்புக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஐ.ஐ.டி பம்பாயின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியரான சுப்ரதிக் சக்ரவர்த்தி இந்த ரோபோவை உருவாக்கிய ஆசிரியருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அவர் படேலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாவது, “இது உண்மையில் ஒரு பெரிய வளர்ச்சி. இத்தகைய ரோபோவை கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பல துறைகளிலும் பயன்படுத்தலாம். ஷாலு அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்க முடியும்" என்று எழுதியுள்ளார்.
Published by:Ram Sankar
First published: