யோகி ஆதித்யநாத் ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சி கோரிய மனு: அபராதம் விதிப்போம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

யோகி ஆதித்யநாத்

மொத்தம் 6,476 என்கவுண்டர்கள் கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக ஆட்சியை கலைத்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  இது தொடர்பாக சுகின் என்பவர் மேற்கொண்ட மனுவில், “உத்தரப் பிரதேசத்தில் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளது போலீஸாரின் விதிமீறல் படுகொலைகள் என்கவுண்ட்டர் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றன, போலி என்கவுண்டர்கள் அதிகம் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம்தான் எனவே மாநில அரசைக் கலைத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும்.

  தேசியக் குற்றப்பதிவேடு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையில்தான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

  இந்த மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமை அமர்வின் மூன் வீடியோ கான்பரன்சிங் விசாரணையின் முன் வந்தது.

  இதற்கு மறுகேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்று எத்தனை மாநிலங்களில் நீங்கள் குற்றப்பதிவுகளை ஆய்வு செய்துள்ளீர்கள்? அப்படி செய்திருந்தால் அந்த ஆய்வின் மீதான உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க முடியுமா?

  மனுவில் தெரிவித்துள்ள தகவல்கள் தொடர்பாக, எந்த ஆய்வையும் நீங்கள் மேற்கொள்ளவில்லை என, உறுதியாக தெரிகிறது.இந்த பிரச்னையில், தொடர்ந்து வாதங்களை முன்வைத்தால், மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க நேரிடும், என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

  2020-ல் இகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியன்று வெளியான செய்தியில் கடந்த 3 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநில போலீஸார் செய்த என்கவுண்டர்களில் 37 சதவீத நபர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டது.

  உ.பி.யில் சிறுபான்மையினர் எண்ணிக்கை மாநில மொத்த மக்கள் தொகையில் 19% என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 6,476 என்கவுண்டர்கள் கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

  2017 முதல் 5,178 என்கவுண்டர்கள் என்று உ.பி.போலீஸாரே தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 2019-ல் உ.பி. போலீஸ் வெளியிட்ட ட்விட்டரில் என்கவுண்டர்களைப் புகழ்ந்து ‘காட்டாட்சி கடந்த காலம், இனி கிடையாது’ என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில்தான் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: