Home /News /national /

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்- சாதிப்பாரா யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்- சாதிப்பாரா யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முன் உள்ள சவால்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

உத்தரபிரதேசம் ஒரு தனி நாடாக இருந்திருந்தால் மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் 6 வது பெரிய தேசமாக இருந்திருக்கும். 23 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச தேர்தலில் சுமார் 15 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 1985 இல் இருந்து உத்தரபிரதேசத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து இரு முறை ஆட்சியில் நீடித்ததில்லை. அதாவது ஒவ்வொரு தேர்தலுக்கும் இம்மாநில மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள். 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்திற்கு தேர்தல் ஆணையம் ஏழு கட்டங்களாக தேர்தலை திட்டமிட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தவும், மேற்கு வங்கத் தேர்தல் தோல்வியில் துவண்டுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் உத்தரபிரதேச தேர்தல் வெற்றி பாஜகவிற்கு மிக அவசியமானது. மேலும் அடுத்த தேர்தல்களுக்கான வெற்றி சூத்திரத்தையும் உத்தரபிரதேச தேர்தலில் பாஜவினர் பரிசோதித்து பார்க்கின்றனர்.

உத்தரபிரதேசம் இம்முறை நான்கு முனை தேர்தலை சந்திக்கவுள்ளது. 2014ல் இருந்த மோடி அலையின் நீட்சியாக, 2017ல் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது 403 தொகுதிகளில் 312 தொகுதிகளையும், 39.7%வாக்குகளையும் பெற்றது. 2002 முதல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியமைத்த கட்சிகளில் இதுவே ஒரு கட்சி பெற்றஅதிகபட்ச வாக்கு சதவீதமாகும். 2002-ல் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பாஜக, காங்கிரஸ் என்று யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2002-தேர்தலில் பாஜக 88 தொகுதிகளையும், 20.1% வாக்குகளை பெற்றது. 2007-ல் பாஜக 51 தொகுதிகளையும் 17% வாக்குகளையும் கைப்பற்றியது. 2012-ல் 47 தொகுதிகளையும் 15% வாக்குகளையும் பெற்றது. தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2017-ல் மோடி அலையின் காரணமாக அதன் வாக்கு சதவீதம் 39.7% ஆக உயர்ந்தது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை விட்டு விலகும் கட்சியினர்...!இத்தனைக்கும் முதல்வர் வேட்பாளரே இல்லாமல் இத்தேர்தலில் பாஜக களமிறங்கியது. 2014-2019 மோடி அரசு பொறுப்பேற்ற இரண்டறை ஆண்டுகளில் அதாவது 2017ல் வீசிய மோடி அலை, 2019-2024 இரண்டறை ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலிலும் வீசுமா என்ற கேள்வியும் உள்ளது. மோடி அரசின் பெரும்பாலான நடவடிக்கைகள் இந்த இடைப்பட்ட 5 ஆண்டுகளிலேயே நடைபெற்றுள்ளது. ஜூலை 2017 அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி, 2019ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது, சர்ஜிக்கல் ஸ்டிரைக், மூன்று வேளாண் சட்டம் அமல், விவசாயிகளின் போராட்டம், வேளாண் சட்டம் ரத்து போன்ற நடவடிக்கைக்கு பிறகு உத்தரபிரதேசத்தில் மோடியின் அலை எவ்வாறு உள்ளது என்பதை உணர்த்தும்.


அதே நேரம் பெரும்பான்மையுடன் உத்தரபிரதேசத்தை 5 ஆண்டுகள் யோகி ஆதித்தய நாத் ஆட்சி செய்துள்ளார். 543ல் 80 மக்களவை தொகுதிகளையும், 245ல்- 31 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை பெற்றுள்ள உத்தரபிரதேச தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான ஒரு திறவுகோள் என்பதை பாஜக நன்று உணர்ந்தே உள்ளது. அதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பாஜகவின் பரப்புரை கூட்டங்களில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தவறாமல் இடம்பிடித்து விடுகிறார்கள்.

2017ல் சட்டமன்ற தேர்தலை, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே சந்தித்த பாஜக, தேர்தல் வெற்றிக்கு பிறகு மக்களவை உறுப்பினராக இருந்த யோகி ஆத்யநாதை முதல்வராக அறிவித்த போது பலரும் ஆச்சர்யம் அடைந்தார்கள். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சட்ட மேலவை உறுப்பினர் பதவி மூலமாக தன்னுடையை பொறுப்பை தொடர்ந்த யோகியின் பதவி காலம் வரும் ஜூலை 6 ஆம் தேதி முடிவடைகிறது.

ஊழலற்ற நிர்வாகம், சிறப்பான சட்ட ஒழுங்கு, வளர்ச்சி என்ற முழங்கங்களை பாஜகவினர் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே நேரம், அயோத்தியில் ராமர் கோவிலை பாஜகவால் மட்டுமே கட்டமுடியும் என்ற முழக்கத்தையும் பாஜகவின் மேடைகளில் கேட்கமுடிவது அக்கட்சியினரின் இலக்கு யாருடைய வாக்கு என்பதையும் உணர்த்துகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இத்தேர்தல் 80%-20% இடையே நடைபெறும் தேர்தல் என்று பேசியதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

ஆனால் இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், தவறு செய்தவர்கள் தற்போது அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாஜகவினரின் விளம்பரங்கள் மறைமுகமாக தங்கள் ஆட்சியில் நடைபெற்ற என்கவுண்டர்களை நினைவுபடுத்துகின்றன. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முறை குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தாலும், கொரோனாவை மிகச்சிறப்பாக கையாண்டதாக பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வரை பாராட்டியுள்ளார்.

யோகி ஆதித்யநாதின் செல்வாக்கும், அவரின் ஆட்சி முறை வட இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் வரவேற்பு பெறுவதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
இந்தி பேசும் மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிராச்சாரங்களில் அவர் உரையாற்ற வேண்டும் என்று பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அவரை அழைப்பதும், அவரின் பிரச்சாரம் தங்களுக்கு வலு சேர்க்கும் என்ற நம்பிக்கை பாஜக நிர்வாகிகளுக்கு ஏற்படுவது கட்சிக்குள் யோகியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை உணர்த்துகிறது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சரியாக 6 மாதங்கள் முன்பு, கர்நாடக, உத்தரகாண்ட், குஜராத் மாநிலங்களில் பாஜக முதல்வர்களை மாற்றியது குறிப்பிடத்தக்கது. யோகி ஆதித்ய நாத்தும் மாற்றப்படலாம் என்று பேசப்பட்டாலும் அவ்வாறு நடைபெறவில்லை. யோகியின் அரசியல் முறை அவருக்கு பாஜவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுத்தந்த நிலையில், அவர் அடுத்த பிரதமர் வேட்பாளராக தயார்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரப்பப்படுகிறது.

ஏனெனில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்பை வகிக்கக்கூடாது என்ற விதியின் அடிப்படையில் அண்மையில் எடியூரப்பா தன்னுடைய முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2023ல் பிரதமர் மோடியும் தன்னுடைய 75 வயதை பூர்த்தி செய்கிறார். இந்த விதி பிரதமருக்கு பொருந்துமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க பாஜகவினர் தயங்கலாம். ஆனால் தேசம் முழுக்க பிரபலமானவராக யோகி தற்போது அறியப்படுகிறார்.

இன்னும் 6 மாதங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலோ அல்லது கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை பெறாவிட்டாலோ பாஜகவிற்கு அது சிக்கலை ஏற்படுத்தும். கடந்த 3 நாட்களில் பாஜகவில் இருந்து 3 அமைச்சர்கள் உட்பட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளனர். இது பாஜகவில் சலசலப்பை ஏறுபடுத்தியுள்ளது. பாஜகவின் சிந்தாந்தத்தை உள்ளும் புறமும் தரித்து 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த யோகிக்கு உத்தரபிரதேச மக்களின் தீர்ப்பு, அவருக்கும், பாஜகவிற்கும் மிக முக்கிய தேர்தலாகும்.

யோகியின் வெற்றி பாஜகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வரும் என்பது மட்டுமல்ல, 2024 மக்களவை தேர்தலின் வெற்றித் திறவுகோள் என்றும் பாஜகவினர் நம்புகின்றனர். தேர்தலுக்கு எல்லாம் தாய் தேர்தல் என்று வர்ணிக்கப்படும் இந்த உத்தரபிரதேச தேர்தல் இன்னும் நிறைய திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Election 2022, Uttar pradesh

அடுத்த செய்தி