முகப்பு /செய்தி /இந்தியா / டிரம்ப்பின் 36 மணி நேர இந்திய டிரிப்!

டிரம்ப்பின் 36 மணி நேர இந்திய டிரிப்!

டிரம்ப் உடன் மோடி 
(கோப்புப்படம்)

டிரம்ப் உடன் மோடி (கோப்புப்படம்)

  • Last Updated :

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்க அகமதாபாத் நகரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. 36 மணி நேரம் இந்தியாவில் செலவிட உள்ள ட்ரம்ப்பின் பயணத்திட்டம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருகிறார். தூய்மைப்படுத்தப்பட்ட சாலைகள், சாலையின் நடுவே பூந்தொட்டிகள், பிரமாண்ட பதாகைகள், கண்ணைக்கவரும் ஓவியங்கள் என குஜராத்தின் அகமதாபாத் உற்சாகமாக தயாராகி வருகிறது.

ட்ரம்ப் உடன் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப், மகள் இவாங்கா, இவாங்காவின் கணவர் குஷ்னர், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசர், பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன், நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனிச், வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், நிர்வாக அலுவலக இயக்குநர் மிக் முல்வானே ஆகியோரும் இந்தியா வர உள்ளனர்.

திங்கட்கிழமை பிற்பகலில் அகமதாபாத் விமான நிலையம் வரும் ட்ரம்ப், அங்கிருந்து சாலை வழியாக மோதேரா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு செல்கிறார்.

சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.  அப்போது, இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான கலைநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

மோதேரா மைதானத்தில் ட்ரம்ப்-புக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் சமர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் ட்ரம்பிற்கு, மகாத்மா காந்தி குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி பரிசளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் ட்ரம்ப், அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு குடும்பத்தினருடன் செல்கிறார்.

தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் மட்டும் செல்வதால், அப்போது பிரதமர் மோடி உடனிருக்க மாட்டார் .

தாஜ்மகாலை பார்வையிட்டு முடித்த பின், டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா விடுதியில் ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் தங்க உள்ளார்.

பிப்ரவரி 25ஆம் தேதி காலையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதையடுத்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு பிரதமர் மோடி உடன் சென்று ட்ரம்ப் மரியாதை செலுத்த உள்ளார்.

இதையடுத்து ஐதராபாத் இல்லத்தில் ட்ரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

அப்போது இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து ட்ரம்புக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.

மாலையில் ட்ரம்பிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்தளிக்கிறார்.  இதையடுத்து தனது 36 மணி நேர இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு ட்ரம்ப் புறப்படுகிறார்.

top videos

    இந்த பயணத்தின் போது மதச்சுதந்திரம், மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட குறித்து ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் விவாதிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    First published:

    Tags: Trump India Visit