உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவின் பெட்ரோல் பங்க் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பரேலி மாவட்டத்தில் உள்ள போஜ்புரா தொகுதியில் இருந்து சமாஜ்வாதி எம்எல்ஏவாக ஷாஜி இஸ்லாம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு போஜ்புராவின் பர்சக் கேடா பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. பரேலி வளர்ச்சி ஆணையத்திடம் (பிடிஏ) கட்டிட வரைபட அனுமதி பெறாமல் இது கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு ஷாஜி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. தனது அரசியல் அதிகாரத்தை காட்டி அதிகாரிகளை அவர் மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் நேற்று காலை புல்டோசருடன் சென்ற பிடிஏ அதிகாரிகள், பெட்ரோல் பங்க் கட்டிடத்தை இடித்து அகற்றினர்.
எம்எல்ஏ.வான பிறகு கடந்த 2-ம் தேதி, பரேலியில் கட்சிக் கூட்டம் ஒன்றில் ஷாஜி பேசினார். அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக, ஷாஜி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு
இந்நிலையில் ஷாஜியின் பெட்ரோல் பங்க் விவகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு நடவடிக்கை நேற்று திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர காஜியாபாத்தின் 3 பகுதிகளில் முன் அனுமதி பெறாத கட்டிடங்களும் நேற்று இடிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பரேலி வளர்ச்சி ஆணைய செயலாளர் யோகேந்திர குமார் கூறும்போது, ஜூலை 2019ல் பெட்ரோல் பங்க் கட்டுமானம் தொடங்கியது. அப்போது கட்டுமானத்தை நிறுத்துமாறு ஷாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நிறுத்தவில்லை. பல விசாரணைகளுக்கு பிறகு மார்ச்.2021ல் கட்டிடத்தை இடிக்க உத்தரவு வழங்கப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் கட்டிடம் இடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, போஜிபுரா தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான இஸ்லாமை பலமுறை அழைப்பு விடுத்தும் குறுஞ்செய்தி அனுப்பியும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார். மேலும், கட்டிட அனுமதி பெறாததோடு, அரசு நிலத்தையும் ஆக்கிரமிக்க முயன்றதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் சமாஜ்வாதி கட்சி கூட்டத்தில் பேசிய ஷாஜி, சட்டமன்றத்தில் கடந்த காலத்தை விட சமாஜ்வாதி பலமாக இருப்பதாகவும், யோகி ஆதித்யநாத் ஏதேனும் சத்தம் எழுப்பினால், எங்கள் துப்பாக்கியில் வெறும் புகை வராது, மாறாக குண்டுகள் பொழியும்” என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியிருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.